புதன், 21 டிசம்பர், 2011

திருகுறான் கூறும் திருநங்கைகள்.

இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் திருநங்கைகள் பற்றிய எண்ணங்களும் சிற்தைகளும் இருந்துள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ள. எனினும் ஒரு சில இஸ்லாமிய சமூகம் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.ஆனாலும் கூட ஒரு சில முஸ்லிம் சட்ட அறிஞர்களின் திருநங்கைகள் குறித்த வரைவிலக்கணம், சட்ட முடிவுகள் என்பன இன்றைய திருநங்கைகளின் வாழ்வுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் இஸ்லாமிய உலகில் எழுப்பப்பட்டு வருகின்றன.

திருநங்கைகளின் வாழ்வு முறை, அவர்களுக்கான வாழ்வொழுங்கு, வழிபாட்டில் அவர்களுக்குள்ள இடம், அவர்களின் திருமணம், சொத்துரிமை என்று மரணம், நல்லடக்கம் குறித்தும் நபிகளின் போதனைகளை அடியொட்டி சட்ட மற்றும் சமூகவியல் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன

நபிகள் அரவாணிகளையும் ஒரு மனிதச் சமூகமாக அவர்களின் இருப்பை அங்கீகரித்துள்ளார்கள். அவர்களை வெறுக்கவோ விளிம்பு நிலைக்கு தள்ளவோ கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். அரவாணிகளை கேலி கிண்டல் செய்பவர்களுக்கு இருபது கசையடிகளை வழங்கும்படி நபிகள் உத்தரவிட்ட ஹதீஸை இமாம் திர்மிதி அவர்கள் பதிவுசெய்துள்ளார். நபிகளின் காலத்தில் அரவாணிகள் பள்ளிவாசலுக்கு வந்து நபிகளிடம் இணைந்து தொழுகை நடாத்தியுள்ளார்கள். நபிகள் தொழுகையில் வரிசைகளை அமைக்கும் போது முதலில் ஆண்கள், பிறகு சிறுவர்கள், பின்னர் அரவாணிகள், அதன் பின் பெண்கள் என சிலபோது வரிசைப் படுத்தியுள்ளார்கள். இதை வைத்துப் பார்க்கும் போது அரவாணிகளுக்கும் வழிபாட்டு சமத்துவம், ஆண் பெண் என்ற பால்நிலைக்கு இணையான முறையில் வழங்கப்பட்டுள்ளமை புலப்படுகின்றது. இதை அடிப்படையாக வைத்து பிற்கால சட்ட அறிஞர்கள் வழிபாட்டில் அரவாணிகளின் தலமைத்துவம் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அதில் அரவாணிகளின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெண்களுக்கு தலைமை தாங்குவதற்கான அங்கீகாரத்தை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் வழங்கியுள்ளனர். அரேபிய ஆணாதிக்கச் சமூகத்தில் இத்தகைய சமத்துவத்தை திருநங்கைகளுக்கு நபிகள் வழங்கியமை மிகுந்த சவாலுக்குரிய விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக