வெள்ளி, 30 மார்ச், 2012

பூவாய் இருந்தோம் புலியானோம்

அழகாய் பட்டுடுத்தி
கால் சதங்கை அணிந்து
வலம் வந்த எம் கால்கள்
காட்டிலும் முட்களிலும்
பள்ளம் மேடு பற்றைகளிலும்
மேய்தது ஏன் - எம்
தமிழினத்திற்காகவன்றோ

பூவாய் இருந்தோம்
புலியானோம் - எம்
தமிழ் பெண்களை காக்கக
ஈழத்து ஜான்சி ராணிகளானோம்
பாரதம் கண்டது ஒரு லக்ஸ்மி பாயை
தமிழீழம் கண்டது
ஆயிர கணக்கான லக்ஸ்மி பாயை

பாவாடை தாவணியில்
நல்லுார் கோவலில்
பார்த்த உங்களை - காட்டிலில்
நீள காற்சட்டையுடன்
பார்த்தோமே - எம தமிழ்னத்திற்காய்

மற்றய பெண்கள்
காதல் கல்யாணம் குழந்தை
என்றிருக்க நீங்கள் தமிழே
இவையெல்லாம் என்றிருந்தீர்கள்
உங்களுக்கு யாரை நான் ஈடு சொல்ல

தலை பின்னி மல்லிகை பூ
சூடவேண்டிய உங்கள் கூந்தல்
தோட்டாக்களை சுமந்ததேன்.?
குடம் துாக்கி நீர் இறைக்க வேண்டிய
உங்கள் இடுப்பு ஆட்றோளி சுமந்ததேன்?
அழகாய் குழந்தை துாக்கி
கொஞ்ச வேண்டிய உங்கள் தோள்கள்
வெடி குண்டுகள் சுமந்ததேன்?

படிக்க புத்தகமும் பேனாவும்
ஏந்த வேண்டிய உங்கள்
கைகள் துப்பாக்கி ஏந்தியதேன்.?
காதல் வானில் வட்டமிட்டு
நிலவை பார்த்து கவிதை
பாடவேண்டிய நீ
புரட்ச்சி கவிதைகள் தோற்றியதேன்.?

எல்லாம் முடிந்ததென்று இன்று
வெறி கொண்ட நாய்களிடம்
சிக்கி மூளைசிதறி அம்மணமாகி
கற்பையும் தமிழிற்காய் பறி கொடுத்து
மண்ணானதேன்? - எல்லாம்
தமழினத்தை காக்கவன்றோ

புதன், 28 மார்ச், 2012

நான் ஓர் சுயநல காதலி

என் தோழியின் காதலன் - என
தெரிந்தும் உன் மேல் காதல் கொண்டேன்
உன் அழகை கண்டு அல்ல - நீ
அடுத்தவர் மேல் கொண்டுள்ள
பாசத்தையும், நேசத்தையும் கண்டு
அது எனக்கும் கிடைக்க கூடாதா என்ற
ஏக்கத்திலேயே உன் மேல் காதல் கொண்டேன்.

என் தோழிக்காய் என் வாயை மூடி
பாதலை மறைத்தேன். ஆனால்
உன் மனதில் அவளில்லை
நான்தான் இருக்கிறேன் - என
அறிந்தும் என் காதலை நான் மறைத்தால்
அது என் முட்டாள் தனம்

என் தோழிக்கு துரோகம் செய்ய
எனக்கு விருப்பமில்லை - ஆனால்
இது துரோகமாக எனக்கு தெரியவில்வை
அவளின் ஒரு தலை காதல் ஜயோ பாவம்

ஆனால் யாருக்கும் உன்னை நான்
விட்டுக் கொடுக்க தயாராக இல்லை
தியாகி என்று கூறிவிட்டு உன்னை
அவளோடு சேர்த்து வைக்க மாட்டேன்
நான் என்ன பொதுவுடமைவாதியா?
உன்னை தானம் வார்க்க - அல்லது
நீ என்ன பொதுவுடமையா? தானம் கொடுக்க
மொத்தத்தில் நான் ஓர் சுயநல காதலி...

ஞாயிறு, 25 மார்ச், 2012

என்னை அழ வைத்த passion the christ

ப்போது கிறஸ்தவர்களின் தபக் காலம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இக் காலங்களில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்பனவற்றை நினைவு கூர்ந்து பல விதமான கலை நிகழ்வுகளையும் வழிபாடுகளையும் நடத்துவர். அந்த வகையில் கிறிஸ்தவ தொலைக்காட்சிகளும். இவ்வாறான கருத்துள்ள நிகழ்ச்சிகளையே தொகுத்து ஒளிபரப்பும். அந்த வகையில் நேற்றய தினம் யாழ்ப்பாணத்தில் மட்டுமே l.b.n கேபிள் மூலம் ஒளிபரப்பப்படுகின்ற தமிழ் கத்தோலிக்க லங்கா தொலைக்காட்சி என்ற தொலைக் காட்சியில் நேற்றய தினம் passion of the christ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இத் திரைப்படம் பற்றி கேள்வி பட்டுள்ளேன் ஆனால் முதன் முறை பார்த்தேன்.

ஏற்கனவே இயேசுவின் வரலாறுகளை கூறும் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ள போதும் அவரின் பாடுகளை மையப்படுத்தி வந்த முழு நீள திரைப்படம் இதுதான். இதில் யேசுவாக நடித்த நடிகர் நிஜயேசு எப்படி இருந்திருப்பாரோ தெரியாது ஆனால் வரை பார்க்கும் போது ஒரு தெய்வ பயம் நெஞ்சில் ஏற்படுகின்றது. எல்லா பாத்திரங்களும் தம் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

கசையடிகள், முள்முடி தரித்தல், சிலுவையில் அறைதல் போன்றவற்றிலும் தசைகள் கிளிந்து இரத்தம் ஆறு போல் ஓடும் நேரங்களிலும் என்னை அறியாமல் நானே அழுது விட்டேன் ஏனென்றால் காட்சிகள் அனைத்தும் உண்மையாக எடுக்கப்பட்வைகளாக காட்சி தந்தன. என்னோடு சேர்ந்து என் குடும்பமும் கண்ணீர் கடலில் மூழ்கினர் என்று சொல்ல எனக்கு ஜயமில்லை. நீங்கள் இப்படம் பார்க்கவில்லை எனில் இதோ உங்களுக்காக முழு திரைப்படமும்.........


வெள்ளி, 23 மார்ச், 2012

நீங்கள் சிக்கன் 65 பிரியரா? அப்ப இத கேளுங்க....

தற்போது பிரபலமடைந்து வரும் உணவுகளில் சிக்கன் 65 மிக முக்கியமானது ஜரோப்பா அன்றி இந்தியா, இலங்கை உட்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் இதன் பிரியர்கள் ஏராளம்.ஏன் அதில நானும் ஒருத்திதான் கடந்த வியாளக் கிழமை(22.03.12) இதற்கு ஆப்பு வைக்குமா போல் ஒரு செய்தி தின கரன்(l.k) பத்திரிகையில் வெளியானது அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிவப்பு நிறத்தில் மொறு மொறு என்று இருந்தாலே சாப்பிட துாண்டும் உணவு இந்த சிக்கன் 65. இந்த கண்னை கவரும் நிறத்துக்காக இதில் சேர்கப்படும் மசாலா துாளில் உள்ள இரசானப் பொருட்கள் உடலுக்கு மிக தீங்கானவை என மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இதை சாப்பிடுகின்றவர்களுக்கு சிறு நீரக பிரச்சினைகளும், மரபணு பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது அதீத வெப்பத்தில் தயாரிக்கப்படுவதால் புற்று நோய் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவு வகைகளில் பயன் படுத்த கூடிய செயற்கை நிறங்கள், பயன் படுத்த கூடாத செயற்கை நிறங்கள் என இரு வகையான செயற்கை நிறங்கள் உண்டு. 08 வகையான நிறங்கள் மட்டுமே பயன் படுத்த அனுமதி உண்டு அதுவும் குறிப்பிட்ட அளவு மாத்திரமே.இவை பொதுவாக அடைத்து வரும் உணவுகளிலும், ஜஸ்கிறீம் வகைகளிலும் பயன்படுபவை. அதனால் இதை யாரும் கடைப் பிடிப்பது கிடையாது.

சிக்கன் 65 உணவில் அனுமதிக்கப்பட்ட நிறத்திற்கு அதிகமாக நிறங்கள் சேர்ப்பதாலும் சுவையூட்டி அமிலங்கள் சேர்பதாலும் சாப்பிட்ட மாத்திரத்திலேயே நெஞ்சு எரிச்சல், அரைப் பை அழற்சி போன்ற நோய்களை கொண்டு வந்து விடும்.சிக்கன் 65 ல் துணிகளுக்கு சாயமேற்ற பயன்படும் சூடான டை மொட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது பலவேறான நோய்களை கொண்டு வரும் காரணியாக உள்ளதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த நிறங்களில் இனிப்புகளில் மட்டும் சேர்க்க வேண்டும் காரங்களில் சேர்க்க அனுமதி கிடையாது என உணவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதை விற்பனை செய்பவர்களும் இதில் உள்ள தீவினைகள் அறியாமல் விற்பனை செய்கிறார்கள். மக்களும் அறியாது வாங்கி உண்கிறார்கள். செயற்கைக்கு பதிலாக மிளகாய்யில் உள்ள சிவப்பு இயற்கை நிறத்தை உபயோகிக்கலாம் என நான் நினைக்கிறேன்.

சிக்கன் பிரியர்களுக்கு இந்த விடயம் கவலையை ததரலாம் என்ன செய்வது இதுதானே உண்மை என மருத்துவ உலகம் கூறி நிற்கிறது. முடிந்த வரை இதை நாம் தவிர்த்தால் எம் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்.

புதன், 21 மார்ச், 2012

இன்று உலக நீர் தினம் மார்ச் 22

இயற்கை அன்னை எமக்கு தந்த செல்வங்களுள் முக்கியமானது நீர் ஆகும். மனஜதன் உணவின்றி இருநாள் உயிர் வாழ்ந்தாலும் நீரி்ன்றி ஒரு நாளேனும் உயிர் வாழ முடியாது. இதிலிருந்தே நீரின் மகத்துவம் உலகிற்கு புரியும்.


இத்தகைய நீரின் அவசியம் கருதி ஜ.நா சபையினால் 1992 மார்ச் 22 சர்வதேச நீர் தினமாக பிரகடணம் செய்யப்பட்டது. 3ம் உலக யுத்தம் ஒன்று ஏற்படின் அது நீருக்காக என்று கூறும் அளவிற்கு நீரின் பற்றாக்குறையும், தேவையும் அதிகரித்துவிட்டது. நம் தமிழ் நாடும் கேரளாவும் இதற்கொரு எடுத்துக் காட்டு ஆயினும் எம் மக்கள் மத்தில் நீர் சிக்கணம், துாய்மை பேணல், பாதுகாத்தல் போன்ற விளிப்புணர்வுகள் ஏற்படாமல் இருப்பது மிக கவலை தருகின்றது.

நீர்வள நிபுணர்களின் தற்போதைய கருத்து என்னவெனில் நிலத்தடி நீரும் தற்போது மிக வேகமாக மாசடைந்து வருவது என்பதாகும். அது பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்துவது சுகாதார அமைச்சின் கடமை எனினும் உலகில் நாமும் ஓர் ஜீவராசி என்ற வகையில் மக்கள் மத்தியில் விளிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் , ஊடகங்கள் வாயிலாக சிந்தைகளை அறித்தல் போன்றன. எம் கடமையன்றோ.

நீவளம் ஓர் தேசத்தின் நாடித் துடிப்பு. அதை பாதுகாப்பது நாட்டு பிரயை என்ற வகையில் நம் ஒவ்வொருவரினதும் கடமை.பூமியில் உள்ள நீரில் ஒரு சத வீதமே நன்னீர் காணப்படுகிறது. மிகுதி எல்லாம் உவர் நீர். சனத் தொகை வளர்ச்சி காரணமாக நன்னீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். இன்று மூன்றாம் உலக நாடுகளில் நன்னீருக்கு மக்கள் அலைந்து திரிகின்றனர்.
நன்னீரை மாசு படுத்தாது பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. நம்மை பொறுத்த மட்டில் உவர் நீர் நமக்கு தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் அதையே வாழ்விடமாக கொண்ட கடலவாழ் உயிரினங்களின் நிலை என்வாகும் என்பதை யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது. அதுமட்டுமல்ல இவற்றை நம்பியிருக்கும் மீனவர்களின் நிலையும்தான் கவலைகிடம்.

நீர் பெறுவதற்கு முக்கிய காரணம் மழை. மழை வருவதற்கு முக்கிய காரணம் மரம். நாம் காடை வெட்டி நகரமய படுத்துவதால் எமக்குதான் தீமை என்பதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. காடு வளர்ப்போம் நீா் காப்போம்.எம் உயிர் காப்போம், எம் அடுத்த சந்ததியினர் வாழ வழி சமைப்போம்.

செவ்வாய், 20 மார்ச், 2012

நானும் ஒரு பெண் (சிறு கதை)

மது ஏன் அழுகிறாய்?
அழாதே.........
அழாதேமா.............

மஞ்ஞல் பூசிய அவள் முகத்தில் ஆறு போல் பெருக்கெடுத்த அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறுகிறாள் சுமதி...
 நீர்வாண சடங்கை முடித்து விட்டு நீராட்டு விழாவிற்காக அலங்கரிக்கப் பட்டிருந்த மதுவின் முகத்தில் அந்த அழுகையிலும் சந்தோஷம் புறம்பாக மின்னியது. அந்த தருணத்தில் தன் கொடுமை நிறைந்த கடந்த கால வாழ்வை மீட்டு பார்க்கிறாள் மது.....

பொன்நகர் எனும் அழகிய கிராமம்.. மதிப்பு மிக்க குடும்பத்தில் ஜந்து பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்தவன் மதுசன்.மூத்தது ஒரு ஆண் ஒரு பெண் இளையதும் அவ்வாறே..


மதுசன் நன்றாக படிக்க கூடியவன் வகுப்பில் எப்போதும் முதல் இடம். பாடசாலையில் சின் நிகழ்வென்றாலும் மதுவிக் நடனம் நிச்சயம் இடம் பெறும். மது பிறப்பில் ஓர் ஆண் ஆனால் பாடசாலையிலும் சரி வீட்டிலும் சரி எப்போதும் பெண்களுடனே பழகுவான். தன்னை எல்லோரும் வாடி போடி என்று பேசுவதையே விரும்பினான். தன் யாரும் ஆண் என்று கூறினால் உடனே அழுது விடுவான். அதனால் வகுப்பில் ஆண்களும் சரி பெண்களும் சரி மதுவை அவன் விருப்ப படியே அழைத்து வந்தனர். இது அவனின் வீட்டாரின் காதில் எட்டவே பெரிய பூகம்பம் விட்டில் வெடித்தது.அது மட்டுமல்ல அவனின் கால்களில் தணலும் கொஞ்ஙி விளையாடிது. ஆடும் திறமை கொண்ட அவனுக்கு ஆடவதற்கு தடை விதிக்கப்பட்து.

ஆனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் அக்காவின் உடையையும் ஆபரணங்களையும் அணிந்து ஆடும் பழக்கம் இவனுக்கு உண்டு வழமை போல் மது ஆடுகையில் தற்செயலாக அங்கே வந்த மதுவின் அண்ணன் கண்டுவிட்டான். பயத்தால் நடுங்கிய மது எல்லாவற்றையும் அவசர அவசரமாக களற்றி வீசினான்.

”உனக்கு இப்ப இல்ல எல்லாரும் வரட்டும் செய்யுறன் வேல” என்றான் கணத்த குரலில் அண்ணன் பாலு காலில் விழுந்து அழுதான் ஆனாலும் இரக்கமின்றி வீட்டில் யாவரும் வந்த பிறகு நடந்தவற்றை கூறினான். இரக்கமின்றி மாறி மாறி எல்லோரும் மதுவை வார்த்தைகளாலும் தடியாலும் தாக்கினர். வீட்டை விட்டு செல்வதற்கே தடைவிதித்தனர். ஏனென்றால் மதுவிற்கு அப்பாவிற்கு யாரோ இவன் சில திருநங்கைகளுடன் பேசுவதை கண்டுவிட்டு கூறியுள்ளனர்..

சில நாள் பாடசாலைக்குக் கூட போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த மதுவிற்கு அம்மாவும் சின்ன தம்பி தங்கை தவிர யாரும் ஆறுதல் கிடையாது.
பின் பல கட்டுப்பாடுகளின் கீழ் பாடசாலைக்கு அனுப்பப்பட்டான் மது. வீதியால் செல்லும் போதே பலரும் பல விதமாக பேசுவதை கண்டு

”நான் ஏன் இப்படி இருக்க வேண்டும்? நான் ஆண்தானே ஏன் பெண்ணாக இருக்க ஆசைப் படுகிறேன் இல்லை நான் ஆண்தான்” என்ற கம்பீரத்துடன் புறப்பட்டவன் கண்ணில் மின்னினான் பாலா தான் ஆண் என்பதை அந்த நொடியே வெறுத்தாள் நானா என்னை ஆனாக நினைத்தேன் சீசீசீக்க்க் என்று தன்னையே நச்சித்தான்.அந்த நொடியே பாலா மேல் காதல் கொண்டாள்.

தனக்கு ஏற்பட்டிருக்கும் தன் இக்கெட்டான சூழ்நிலையை தன் உற்ற தோழிகள் சிலரிடம் கூறினான் மது.அவர்களும் பலவிதமான தீர்வு தேடினர் இறுதியாக காவேரி என்பவள் ஒரு யோசனை கூறினாள் தன் தெருவில் சுமதி என்ற ஓர் அக்கா இருப்பதாகவும் ஆரம்பத்தில் அவர் இப்படித்தான் இருந்ததாகவும் கூறினாள். கூறியவள் சுமதியிடமும் அழைத்து சென்றாள். மது சுமதியிடம் எல்லாவற்றையும் கூறினாள்...

அதற்கு சுமதி ”இங்க பாருமா இனி நீ மதுசன் கிடையாது நீ இனி மதுசா... நம்மள இந்த ஒலகம் புரிஞ்சுக்க முற்படுறது றொம்ப கஸ்டம்மா என்றாலும் நாம வீட்ட விட்டு வெளிய வந்தா பெரிய ஆபத்து இந்தா உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்கோ இப்போத மனமில்லாவிட்டாலும் நாசமா போன இந்த பாவ வேல செய்து பொளப்பு நடத்துற நிலையா போச்சுமா முடிஞ்ச வரைக்கும் உன்ன பத்தி உன் வீட்டு காரங்களுக்கு கூறு ஏத்துகிட்டா உண்டு இல்லண்ணா வெளிய வந்திடு”.

இதை காதில் வாங்கிய மது வீடு சென்று எல்லாரும் இருக்கும் நேரத்தில் தன் நிலை பற்றி அழுது பலம்பி கூறினாள்.
ஆனால் அவர்களோ........

”சீசீ வாயை மூடு உன்னால எங்களுக்கு வெட்கமாய் இருக்கு.. எங்களுக்கு அவமானமாய் இருக்கு”     என்று கூறி திட்டினர். மதுவோ

”நீங்கள் எல்லாரும் எங்களுக்கு அவமானமாய் இருக்கு எங்களுக்கு வெட்கமாய் இருக்கு என்று உங்கள பத்தியே யோசிக்கிறீங்க என்ன பத்தி யாரும் கவலபடுறது கிடையாது என்ர மனசில எவ்வளவு வேதன இருக்கின்னு யாருக்கும் புரியல..”

என்று கூறிவிட்டு தான் படித்ததற்கான ஆதாரத்தை மட்டும் எடுத்து கொண்டு தன் புது உலகை நோக்கி புறப்பட்டாள். தெருக்களில்,பஸ்களில் தனக்கு நடந்த கொடுமைகளை நினைத்தவாறு சுமதி வீட்டிற்கு சென்றாள் அவளும் அவளை தங்கையாக ஏற்றாள்

என்னம்மா யோசிக்கிறாய்..........
மதுவை தட்டி கேட்கிறாள் அவள் தாயம்மா
”இல்லம்மா நான் அவனாய் இருந்தப்போ நடந்தவற்றை நினைத்துப் பார்த்தேன்” என்றாள்
அளவுக்கடங்கா சந்தோசத்தோடும் இப்போது நானும் ஒரு பெண் என்ற உள்ள செருக்கோடும்.அவள் காதலன் நினைவுகளோடு.. 

ஞாயிறு, 18 மார்ச், 2012

கவி சரங்கள் 02

என் உயர் பரிசு
என் அப்பா
வாங்கி தந்த
பட்டுப் புடவையிலும்
நீ எனக்கு
பிடித்து தந்த
பட்டாம் பூச்சி

பூக்கள்
வண்ணத்துப் பூச்சி
தவழும்
பஞ்சு மெத்தைபனித் துளி
மேகம் பூக்களை
முத்தம் செய்ததன்
அடையாளம்

சில்லறை
ஜஸ்வரியவான்
காலில்
பிச்சைக் காரன்
கையில்

மெழுகுவர்த்தி
தன்னுயிர் ஈந்து
பிறர் வாழ
ஒளி கொடுக்கும்
மகான்

வியாழன், 15 மார்ச், 2012

ஜ.நா வின் முயர்ச்சி வெல்லுமா???

இன்று உலகளாவிய ரீதியில் பெரும்பாலும் பேசப்படும் விடயம். அமெரிக்கா ஜ.நா சபையூடாக இலங்கையின் கொடூர செயல்களுக்கெதிராக கொண்டு வந்த போர்க்குற்ற தீர்மானமே.

கடந்த யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு நடந்த கொடூரங்கள் சொல்லில் அடங்காதவை. நானே நேரடி சாட்சியங்களை கண்டுள்ளேன். அவர்கள் கூறும் ஒவ்வொரு சொல்லிலும் வேதனை,மகாதுக்கம்,வெளிப்படும். இதை கேட்ட நானே குளறி அழுதுள்ளேன். நான் அந்த கால கட்டங்களில் பிரான்ஸில் இருந்ததால் என்னால் உணர முடியவில்லை. ஆனால் என் குடும்பத்தினர் அனுபவித்தனர். இப்போது நான் வன்னியில் இருந்தும்,புணர் வாழ்வு நிலையங்களில் இருந்து வரும் என் சொந்தங்களை விசாரிக்கும் போது அதன் கொடுமைகள் புரிகின்றன.

எம் கன்னி பெண்கள்,பெண் சிறுமியர் அந்த கேடான சிங்கள் ராணுவத்தினரின் பாலியல் வேட்டைக்கு இலக்காகி தம் உயிரை ஈந்தனர். காமத்தின் பசி மேலோங்கி காணப்படும் சிங்களவனே ஏன் நீயும் ஓர் பெண்ணின் வயிற்றில் பிறந்தாய் என்பதை மறந்து விட்டாயா? உனக்கு 10,12 வயது தமிழ் சிறுமியர்தானா கிடைத்தனர். இவை நான் சந்தித்த நபர்கள் நேரில் கண்ட அனுபவங்கள்.

இதுமட்டுமல்ல கர்ப்பிணி பெண்களை கூட இந்த காம நாய்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கொடுமைப்படுத்தி கடித்து கொதறியுள்ளனர். பெண்கள் சமுதாயமே கொந்தளி உன் வர்க்கத்திற்கு நடந்த கொடுமைக்கு சிங்கள அரசிடம் நீதிகேள் ஜ.நாவுடன் இணைந்து கொள்.

இதற்காக மனச்சாடசியுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் இன்று தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உத்வேகத்துடன் செயல் படுகின்றது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நேற்று சனல் 04 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களங்கள்,தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற தனது இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயதேயான பால சந்திரன் கொடூரமான முறையில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டதும், பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்டு ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் பதுங்கியிருந்த இடத்துக்குள் எறிகணை தாகடகுதல் நடத்தியதும்,காயமடைந்து உயிருக்கு போராடிய மக்களுக்கு மருத்து வசதிகளை கொடுக்க விடாது தடுத்ததும், பெண்கள் சிறுவர்கள் உட்பட பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த அனைவரையும் பட்டினி போட்டு கொலை செய்தது, என பிரதான 04 குற்றங்களை அந்த ஆவணப்படம் சுட்டி காட்டுகிறது.

இதற்கிடையில் இப்போது யாழ்ப்பாணம் உட்பட சகல இடங்களிலும் வசிக்கும் தமிழ் மக்களை கட்டாயப்படுத்தியும்,இலங்கை அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்குமாறு ராணுவமும் கேடு கெட்ட கறுப்பு ஆட்டு மந்தையுமான ஈழமக்கள் சன நாயக கட்சியும் வற்புறுத்தியது. இதை அறிந்து படம் பிடிக்க சென்ற என் கமராவுக்கு நடந்தது சொல்ல தேவயில்லை.என்னையும் பிடித்து அக்கூட்டத்தில் விடப்பார்த்தனர். அப்புறம் நான் பிராஸ் குடியுரிமைக்காரி என அறிந்து விட்டுவிட்டனர்.

இப்படிப்பட்ட கேடான செயல்கள் நடப்பது இன்று உலகம் காணா உண்மை. ஆனால் ஆதரவு கொடுக்க வேண்டிய இந்தி அரசு இன்னும் இந்த விடயத்தில் மௌனம் சாதிப்பது புரியாத புதிராக உள்ளது.

இறுதியாக என் கோரிக்கை என்னவெனில் அனைவரும் ஒன்றுபடுவோம். தமிழர்களுக்கு நடந்த அவலத்தை தட்டி கேட்போம். அமெரிக்காவுடன் கை கோர்ப்போம்.இந்தியாவை மனமாற்றுவோம். ஜ.நாவின் முயர்ச்சி வெல்ல ஒத்துளைப்போம். இப்போது இலங்கையில் ஆரம்பித்திருக்கும் கட்டாயப்கடுத்தல் போராட்டத்திற்கு எதிராகவும் முழங்குவோம்.............எஸ்தர்..........

புதன், 14 மார்ச், 2012

விலங்கை உடைத்தெறி திருப்பெண்னெ

கதை கேளு திருப்பெண்னே
உலகை கண்டு பயப்படாதே
நியாயங்கள் தோற்றுப் போகுமோ?
அநியாயம் வாகை சூடுமோ?
இல்லையே........................................
உன் நியாயத்தை உரக்க கேளு
வெல்லுவாய் உலகை 
எதற்கும் சிரம் தாழ்த்தாதே


நீ நாணல் புல்லம்மா
புயல் அடிக்கலாம்
தென்றல் வீசலாம்
சாய்வாய் மாண்டு விடுவாயோ?
பூகம்பமே தாக்கினாலும்
வேர் விட்டு முளைப்பாயன்றோ
பெண்ணாக வாழ துணிந்த பின்
பெண்ணியம் போற்றிடு - உன்னில்
பாலியல்தாரி எனும் முகத்திரை கிளித்திடு
உடலை சித்தரிக்க தெரிந்த - எனக்கு
உலகை சித்தரிக்க தெரியாதா?


வாழ்க்கை எனும் பாதை 
பரமபதம் போலவே
ஏணியுண்டு சர்ப்பமுமுண்டு
போகும் பாதை மத்தியிலுண்டு
முயர்ச்சி துணிவு என்ற ஏணிகள் 
உன்னை ஏற்றி விடும்
பயம் சோகம் எனும் பாம்புகள் 
உன்னை கொத்தி விடும்
கொத்த வரும் பாம்புகளை 
வாளெடுத்து வெட்டி விடு
அலி என்று கூறும் நாய்களை 
கந்தகம் கொட்டி கொளுத்திடு


நீ பட்டாம் பூச்சியடி 
வண்ணமிருந்தும் வண்ணமில்லை
சிறகிருந்தும் பறக்க முடியவில்லை
எச்சில் கூட்டுக்குள் இருந்து 
வெளியே வர நினைத்தாலும்
சாதிக்க துடிக்கும் உன்னை - துாற்றி
சாக்கடையில் வீழ்த்தும் மானிடரால்
அப்படியே கிடக்கிறாய்
கூட்டை பிய்த்தெறி
சிறகின் விலங்கை உடைத்தெறி
விண்ணை தொட உயரப்பற
வானத்தை வண்ணமய மாக்கு........எஸ்தர்.....

ஞாயிறு, 11 மார்ச், 2012

பாலைதீவுப் பயணம்

எல்லோருக்கும் பயணங்கள் புதுப் புது அனுபவங்களை கொண்டுவரும்.அது போலவே எனக்கும் பாலைதீவுப் பயணம் ஓர் புது வித அனுபவத்தை தந்துள்ளது. நான் இலங்கையில் செலவு செய்து கொண்டிருக்கும் இந்த மூன்று மாதத்திலும் புதுப்புது அனுபவங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றுதான் இந்த பாலைதீவு புனித. அந்தோணியார் திருயாத்திரை ஸ்தல பயணம்.

பாலைதீவு இது கத்தோலிக்க கிறிஸ்தவ மீனவர்களால் உருவான பாரிய தீவு. இதன் வரலாறு வாய் மொழி பாரம்பரியமாக கூறப்படுகின்ற போதிலும் முற்றிலும் உண்மை வாய்ந்தது. பாலைதீவு இது யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் எனும் மீனவ கிராமத்துக்கு தெற்கே கிட்டத்தட்ட 03 மணி நேர தொலைவில் அமையப் பெற்ற ஓர் அழகிய தீவு.மினவர்கள் தொழில் செய்த பின் ஓய்வெடுக்கும் தீவாக ஆரம்பத்தில் இருந்தது. பின் தங்கும் மீனவர்கள் தம் பாதுகாப்பிற்காக இறைவனின் அடியார் புனித. அந்தோணியாரின் சொரூபத்தை நிறுவினர். அதன் பின் அங்கு பல புதுமைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கவே அங்கு ஓர் தேவாலயம் மீனவர்களால் கட்டப்பட்டது. பின் 20ம் நுாற்றாண்டின் ஆரம்பத்திலேயே. இது யாத்திரை ஸ்தலமாக பிரகடணம் செய்யப்பட்டு மக்களின் ஆராதனைக்கு விடப்பட்டது.

சரி என் அனுபவம் இதோ நான் குருநகர் எனும் மீனவ கிராமத்தை சேர்ந்தவள். என்பது என் முன்னய பதிவுகளை படித்தவர்களுக்கு தெரியும்.ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் ஏதாவதொரு ஞாயிற்று கிழமையில் இத்திருவிழா இடம் பெறும் இத்திருவிழாவிற்கு பெரும்பாலும் மீனவ சமூகத்தை சேர்ந்த மக்களே பயணிப்பார்கள்.

என் குடும்பமும்,எனது சித்திமார், மாமிமார் அவர்களின் பிள்ளைகள் என்று ஓர் 34 பேர் எனது அப்பாவின் ரோலர் படகில் மதியம் 03.00 மணியளவில் பயணிக்க ஆரம்பித்தோம். கடல் தாய் தன் சீற்றத்தை குறைத்து நாங்கள் பயமின்றி செல்ல வழி செய்தாள். அந்த அமைதியான கடல் பரப்பு என் உறவினர்களின் ஆரவாரப்பேச்சு அதன் நடுவே கடல் வாழ் உயிரினங்களின் சாகசம் என தொடர்ந்தது என் பயணம். மேலே பார்த்தால் நீலம் கீழே பார்த்தால் கடும் பச்சை என நிறங்கள் எனை சூழ்ந்து அலங்கரித்தன. நான் இது வரை கண்டிராத நாரைகள் எங்கள் படகை காவல்காப்பதற்காய் அனுப்பப்பட்ட தேவ துாதர்கள் போல் தொடர்ந்து வந்தன.

இரண்டு மணி நேரங்களின் பின் ஓங்கி நிற்கும் தொலைபேசி கம்பமும், புனித அந்தோணியார் இது என் ஸ்தலம் என கைகாட்டி அழைக்கும் உயரமான சிலையும் என் கண்களுக்கு புலப்பட்டன. இதன் பின் 1/2 மணி நேரத்தின் நாங்கள் தீவை சென்றடைந்தோம். நாம் போகையிலேயே ஏற்கனவே நுாற்று கணக்கான குடும்பங்கள் வந்திருந்தன. அவர்கள் அங்கே குளித்து மகழ்ந்து கொண்டிருந்தனர்.

பின் நாங்கள் சிறிய விசைப்படகின் உதவியுடன் எம் பொருட்களுடன் கரையை அடைந்தோம். நாங்கள் இறங்கிய நேரம் சுட்டெரிக்கும் சூரியன் தன் கதிர்களை மடக்கும் மாலை நேரம். பின் எங்களுக்காக ஆயத்தம் பண்ணி துப்பரவு செய்யப்பட்டிருந்த பற்றை புதர்களுக்குள் கூடாரம் அமைத்தோம். அன்றிரவு எல்லாரும் சாப்பிட்டு விட்டு இரவிரவாக துாங்காமல் கதைத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் வந்த தினம் முழு பௌர்ணமி முடிந்து மறுதினம் என்பதால் சந்திரன் தன் கதிர்களை மடக்கவில்லை. அழகிய நிலவின்,ஒளி கடலலையின் ஓசை,அடர்ந்த பற்றைக் காடு என எங்களை சுற்றி எங்கணும் இயற்கை அன்னை நிறைந்திருந்தாள். நானும் என் தங்கையும் இவற்றை எல்லாம் பாத்து பேசிக் கொண்டிருந்தோம் நேரம் அதிகாலைக்கு தாவவே துாக்கத்தை போ என மறுக்காமல் நித்திரைக்கு சென்று விட்டோம்.

மறு நாள் புது காலையில் கண் விளித்தோம். ஓ எவ்வளவு அழகான இயற்றை காட்சி பொழுந்து விட்டெரியும் சூரியனை நேர்முகமாய் தரிசித்தது போல் அனுபவம்.செஞ்சுடர் சூரியனை முழுப்பரிதியாய் சிறிய தொலைவில் பார்ப்பது போல் இரந்தது. அந்த நேரம் கடல் மழுவதும் சிவப்பு நிறமாக இருந்தது. அப்போது எனக்கு இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போல் இருந்தது.

மறுநாளுக்கான சமையல் வேலைகள் என் கூடாரத்தில் ஆரம்பித்தன. என் அம்மாவுக்கு சமையலுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த அடத்திற்கு ஏன் பாலைதீவு என பெயர் வந்தது என தெரிய வந்தது. அவ்வளவு வெப்பம் தாங்கமுடியாமல் இருந்தது நல்ல வேளை நாங்கள் தங்கியிருந்தது.ஓர் நிழல் பற்றைகளின் கீழ்.

இவ்வளவு அழகான தீவுக்கு இரண்டே இரண்டு குறைதான் ஒன்று வெப்பம் (பகலில் மட்டும்) மற்றது நன்னீர் இன்மை. இத்தீவில் எங்கு தோண்டினாலும் உப்பு நீரையும்,ஊரி சங்கு,சிற்பிகளை தவிர ஒன்றும் வராது. விட்டிலிருந்து புறப்படும் போதே பீப்பாக்களில் தண்ணீர் இறைத்துதான கொண்டு செல்ல வேண்டும்.

அந்நாள் வெம்மையின் கோரம் தாங்க முடியாமல் என் அக்கா தங்கையரோடு நானும் கடலுக்குள் சென்று நீராட ஆரம்பித்தோம். அது எனக்கு என் பாரிஸ் கடற்கரையை நினைவு படுத்தியது. ஜரோப்பியன் கடற்கரைகளுக்கு சரி நிகராக பாலைதீவு கடற்கரை காட்சி தந்தது. மிதப்பிகளுடன் சிறுவர் பெரியவர் என்று வேறு காடு காட்டாமல் அனைவரும் துள்ளி குதித்து விளையாடினர். கடலுக்குள் சில ஆண்களின் சேட்டைகளும் எங்களுக்கு அருக்கத்தான் செய்தது. அதுவும் பது உற்சாகத்தை கொடுத்தது.

பின் உணவருந்தி விட்டு ஆலயம் செல்ல ஆயத்தமானோம். ஆலயம் செல்லும் வழியில் என் தோழியர்,தோழர்கள் எல்லாரையும் கண்டு உரையாடினேன். அப்போது அவர்கள் என்னை தங்கள் கூடாரத்துக்கு அழைத்தனர். வழிபாடு முடிந்த பின் வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டேன்.

அந்தநாளும் சந்தோஷமாக கழிந்து விட்டது. மறுநாள் அந்நாள் நாங்கள் வந்ததற்கு காரணம் அதுதான் திருவிழா நாள். காலை திருவிழாவில் எல்லோரும் கலந்து கொண்டோம். அந்தநாள் அருகிலிருக்கும் சிறு சிறு தீவுகளில் இருந்து மக்கள் வந்த வண்ணமே இருந்தனர். அந்தநாள் திருவிழாவிற்கு வந்தவர்களை விட கடலில் குளிப்பதற்காக வந்தவர்கள் அதிகம் என எண்ணுகிறேன். ஆனால் தீவில் சுமார் 5000 ற்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.

பின் கூடாரம் சென்று உடைகளை மாற்றிவிட்டு சமையல் வேலை எல்லாம் செய்த பின் குளிப்பதற்கு தயார் ஆனோம். அந்தன்று கடலில் குளிப்பதற்கே இடமில்லை அவ்வளவு சனம் எங்கிருந்தோ எஸ்தர் என்று என்னை அழைப்பதாக குரல் கேட்டது சுற்றிலும் பார்த்தும் யாரென்று தெரியவில்ல அவ்வளவத்திற்கு சன நெருசல் காணப்பட்டது.

கடலில் பந்து எறிந்து விளையாடி ஒடித்திரிந்து விளையாடி எல்லேரும் சந்தாஷமாக இருந்தோம். இந்தன்றே நாம் வீடதிரும்ப போகிறோம் என்பதை மறந்து.

குளித்த பின் கூடாரம் சென்றோம் கூடாரமெல்லாம் பிரிக்கப்பட்டு கொண்டிருந்தது. எம் பொருட்களெல்லாம் பொதி செய்யப்பட்டு மீண்டும் குருநகர் செல்ல தயார் நிலையில் இருந்தது. விட்டு செல்ல மனமில்லை எனினும் சென்றுதானே ஆக வேண்டும். ஆசையாய் சுற்றிய இடங்களை மீண்டுமொருமுறை பார்த்து விட்டு படகில் ஏறினோம் மீண்டும் அதே அனுபவம்..

என்வாழ்வில் மறக்க முடியாத இனிய அனுபவமாக மாறிப்போனது இந்த பாலைதீவு அனுபவம். இனி நான் நினைத்தாலும் இதை அனுபவிக்க முடியாது. அந்த இனிய நினைவுகளோடு இதனை எழுதுகிறேன் மீண்டும் புரட்டி பார்ப்பதற்காய்
--எஸ்தர்--- 

வியாழன், 8 மார்ச், 2012

உலகை திரும்பி பார்க்க வைத்த பெண்கள்

அன்னை தெரேசா


அன்னை தெரேசா இன்றும் உலகின் வியப்பின் குறியீடு. மனித வர்க்கமே புறந்தள்ளிய மனிதர்களை மனிதநேயத்தோடு மதிக்க கற்று கொடுத்த மனுசி. கிறிஸ்தவ துறவியாகிய போதும் ஜாதி,மதம்,மொழி கடந்து அன்பால் உலகை ஆழ கற்று தந்த அதிசய பெண். தன்னிடம் பணமில்லாத போதும் பிச்சை எடுத்து மற்றவருக்கு உணவு கொடுத்த மாபெரும் வள்ளல். அதனால்தான் இன்று கத்தோலிக்க கிறிஸ்தவ உலகம் இன்று இவரை புனிதையாக உயர்த்தி கொண்டாடுகின்றது.

ஜான்சி ராணி


ஜான்சி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஸ்மி பாய் வீரத்தின் விளைநிலம். யாருக்கும் அஞ்சாத புரட்சிப்பெண். ஆண்களே ஆங்கிலேயருக்கு அடிமையாக துணிந்த காலகட்டத்தில் வாளெடுத்து வில்தொடுத்த வீராங்கனை. இவர் வரலாற்றின் சரித்திர குறியீடு. பிரித்தானியாவையே நடுங்க செய்த பெண், ஆண்களை ஆண்ட விக்டோரியா மாராணியையே கதிகலங்க வைத்த வீரப்பெண்.

க்ளியோபாட்ரா


எகிப்தின் தலை சிறந்த மாராணிகளுள் முதலிடம் பெறுபவள். அழகால் உலகை ஆண்டவள் எனும் பெருமை இவளையே சாரும். தந்தை இறந்த பின் ஆட்சி செய்ய வந்தாள். 18வது வயதிலேயே ஆட்சி தந்திரோபாயங்களை பயன்படுத்தி சிறந்த எகிப்தை உருவாக்க பாடுபட்டவள். அப்போதைய உலகின் சாம்ராட்சியமான உரோமை நிர்மூலப்படுத்திய சாதனை மங்கை. அழகுடன் சேர்த்து வீரத்தையும் கொண்டிருந்தவள். இன்று வரை இவளின் இறப்பு வரலாற்று ஆய்வாளர்களுக்கு பெரும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

திங்கள், 5 மார்ச், 2012

என் கனவு திருமணம்

சொப்பனங்கள் ஆயிரம்
கண்டேன் ஆயினும் - இச்
சொப்பணம் போல் வருமா??

சுற்றி எங்கணும்
சாம்பிராணி நறு மணம்
முற்றம் முழுவதும்
முகை மல்லிகை
தேவர் யாவரும்
புடை சூழ்கிறார்கள்
சுந்தரிகள் என் தோழியராகின்றனர்

மயில் வாகனம் வந்தாயிற்று
பசு வாகனமும் வந்தாயிற்று
வளை பொத்தானும் வந்தாயிற்று
சர்பமஞ்ஞத்தோனும் வந்தாயிற்று
தாமரை பூவரசிகளும் வந்தாயிற்று

எல்லோர் கைகளிலும்
ரோயா இதழ்கள்
அந்த நேரத்தில் நம் மேல் துாவ....

மந்திரங்கள் ஓதுகின்றன
கெட்டி மேளங்கள்
கொட்டு கின்றன - என்
சங்கிலேற மஞ்ஞள் வடமில்லையே
அந்தோ நெற்றிக்கண் திறந்ததுவே
முக்கண் காய் மேலே மஞ்ஞள் வடம்

முத்தலையோன் வடமெடுத்து
அவரிடம் கொடுக்க.- என்
சங்கிலது ஏறுகையில்
கெட்டி மேள்ங்கள் முழங்கலாயின

வானம் தன் வாழ்த்தை
இடியாய் கொட்டிற்று
மேகம் தன் வாழ்த்தை
மழையாய் துாவிற்று
பூமி தன் வாழ்த்தை
மின்னலுடனும் காற்றுடனும்
சேர்ந்து சொல்லிற்று
எல்லோர் கைகளிலும் இருந்த
ரோயா இதழ்கள் எங்கள் மேலே

செந்திலகமிடும் நேரம் வந்ததே
காஷ்மிர் தேவதைகள்
திருமணபதி வந்து - என்
மணவாளனிடம் - பல
குவளைகளை நீட்டின - என்
மணவாளனோ யார் மனதும்
புண்பட கூடாதென்று எல்லோர்
குவளையிலும் சிறு துளி எடுத்து
என் நுதலில் செம்பிறையிட்டார்

அவ்வளவு நேரமும் மூடியிருந்த
என் கண்கள் திறந்தன
அப்போதுதான் தெரிந்தது - அது
என் படுக்கை அறை என்றும் - நான்
கண்டது கனவென்றும்.........

ஞாயிறு, 4 மார்ச், 2012

நாக மாணிக்கம் (ரத்தினம்)

நாக ரத்தினம் பற்றி பலரும் பல விதமாக கதைகள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் நாக ரத்தினம் பற்றி கேள்விப்பட்ட சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக நவரத்தினங்களில் இருந்து நாக ரத்தினம் முற்றிலும் வேறுபட்டது. நவரத்தினங்கள் பூமியிலிருந்து எடுக்கப்படும். நாகரத்தினமோ நாகபாம்பிலிருந்து எடுக்கப்படும்.

நாகபாம்பு பல வகைப்படும் யோகிகள்,ரிஷிகள் இவைபற்றிய நிறைய ஆய்வுகளை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே நடத்தியிருக்கின்றனர். அவற்றில் ஒரு வகையான நாகங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டவை யாரையும் தீண்டாமல் இறந்தவற்றை மாத்திரம் உண்டு வாழக் கூடியவையாக இருந்தன. இதனால் இவற்றின் விஷம் பயன்படாமல் போய்விடும் இரையை தாக்கவே விஷம் பயன்படும் என்பதால் அவை இந்த நாகங்களில் தேங்கியே காணப்படும்.

இப்படிப்பட்ட நாகங்கள் இளமையை பாதுகாப்பதில் வலு கெட்டிகாரர்கள் சுமார் 110-150 ஆண்டுகள் வாழக்கூடியன. இதனால் பயன்படாத இதன் விஷமானது நாளடைவில் நாகரத்தினமாக உருவாகும். நாக ரத்தினம் இந்த பாம்புகளுக்கு உருவாகும் தருவாயில் இறக்கைகள் முளைத்து பறக்கும் வல்லமை கொண்டனவாக காணப்படும். இதுதவிர இவைக்கு வேறுபலன் கிடையாது கண்பார்வை மங்கி காணப்படும்

இச்சந்தர்ப்பத்தில் அமாவாசை தினங்களில் காரிருள் காரணமாக இவை ஒளியின்றி,இரை தேட வசதியின்றி இந்த நாக ரத்தினத்தை வெளியில் கக்கி அதன் ஒளியில் இரைதேடும். நாக மாணிக்கம் மிகுந்த பிரகாசமானது. இரை தேடி முடிந்த பின் மீண்டும் வந்து உள்ளெடுத்துக் கொள்ளும்.

நாக ரத்தினம் பற்றிய உண்மைகள்
இவை பல நுாறு வருடங்களாக சேமித்த விஷத்தில் உருவாகியது. இதனால் மகா கொடிய விஷத்தன்மை வாய்தது. கையில் காயம் உள்ளவர்கள் இதனை தொட்டால் உடனே மரணம் நேரும். வாயில் வைத்தாலோ புண்களில் பட்டாலோ உடனே மரணம் நேரும்.பார்த்து கையாள்வது சிறந்தது. 

வியாழன், 1 மார்ச், 2012

உன்னதமான நட்பு

உலகது கண்ட
உத்தம உறவிது
சான்றோர் பறைசாற்றும்
உன்னத உறவிது

காதலை எல்லாரும்
வரமாக கேட்பார்கள்
கேட்காமல் கிடைத்த                                      
வரம் நட்பு

காதல் வந்தால் இதயமெல்லாம்
பொடிப் பொடியாகி விடும்
பொடிப் பொடிப்யான இதயமெல்லாம்
நட்பில் ஒன்று சேரும்


உறவுகளுக்குள் காயம் - வந்தால்
உயிரையும் தின்று விடும்
நண்பர்களுக்குள் காயம் வந்தால்
நாளை மாறிவிடும்


காதலும் சில நேரம்
ஜாதி மதம் பார்த்து வரும்
உன்னதமான நட்பு
உள்ளங்களை மட்டும் பார்க்கும்


திமிரு பிடித்த நெஞ்சத்தை - எல்லாம்
சல்லடை போட்டு விடும்
நன்மை தீமை அறியும் - விதத்தை
விரைவில் கற்றுத்தரும்


நன்நிலத்தில் நட்ட மரம் - இது
பட்டுப் போகாது
கண் மூடும் வேளையிலும் 
கை விட்டு போகாது......