ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

மரித்துப் பிளைத்தவள் 02

முகமாலை நோக்கிய நடை பயணம்......

சென்ற பதிவில் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இடம் பெற்ற அசம்பாவிதங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்போது யாழ் மக்களின் யுத்த கட்டத்தின் முக்கிய இடப் பெயர்வாக கூறப்படும் வன்னி இடப் பெயர்வின் போது நடந்த  அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1995ம் ஆண்டு யாழ்பாண் மக்கள் எல்லாரும் வன்னிக்கு இடம் பெயருமாறு கூறப்பட்டு எல்லாரும் வண்டிகளிலும்,சைக்கிள்களிலும் என்னும் நடந்துமாக பயணத்தை ஆரம்பித்தோம். குறிப்பிட்ட சில நாட்களுக்குள் முகமாலையை தாண்ட வேண்டிய சூழ்நிலை. ஏனென்றால் அதன் ஏ9யின் பாதை அடைபட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லாரும் கிடைத்தவற்றை கையில் எடுத்துக் கொண்டும், சிலர் தம் தங்க நகைகளை பொலதீன் பையில் இட்டு மண்ணில் புதைத்துவிட்டும் தம் பயணத்தை ஆரம்பித்தனர்.

என் குடும்பமும் நடை பயனத்தை ஆரம்பித்தது. என் அப்பா, மாமாமார் துவிச்சக்கர வண்டிகளில் பொருட்களை சுமந்த வண்ணமு்ம். என் அக்கா என்னை கையில் துாக்கிய வண்ணமும் பயணம் தொடர்ந்தது. ஏனென்றால் அப்போதுதான் என் அம்மா என் தம்பியை பெற்று சிறிது நாட்கள் ஆகியிருந்தது. நாங்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் போதே. பீரங்கிகளின் முழகங்களும். ஆகாய விமானதாக்குதல்களும் இடம்பெற்ற வண்ணமே இருந்தது.போகும் இடங்களில் பாரிய பதுங்கு குளிகள் அமைக்கப்பட்டிருந்ததால் குண்டுகள் தாக்கும் போது குளிகளுள் பதுங்க ஏதுவாய் இருந்தது. எனினும் பல உயிர்கள் மாண்டதை மறுக்க முடியாது.

இதில் என்ன கொடுமை என்றால் நடக்க முடியாத முதியவர்களை போகிற போகிற இடங்களில் குடம்பத்தினர் விரும்பியும் விரும்பாமலும் விட்டுச் சென்றனர். இவர்களை வாகனங்களில் ஏற்றி முதியோர் இல்லங்களில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பை கத்தோலிக்க குருக்கள் முன்னி்ன்று நடத்தினர்.

நாவற் குளி எனும் இடத்தை கடக்க வேண்டுமானால் பாலம் வழியாகவே அவ்வூரை அடைய முடியும் செல்தாக்குதலில் அப்பாலம் முழுதும் சேதப்பட்டிருந்தது. மார்புக்கு மேல் தண்ணீர் இருக்கக் கூடிய அந்த பாலத்தின் கீழ் உள்ள நீர் ஓட்டத்தை மக்கள் கடந்தனர் சிலர் அடித்தும் செல்லப்பட்டனர். இதில் கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் என பலரும் பெரும் அவதிப்பட்டு ஆந்நீரோட்டத்தை கடந்தனர். தமக்கென்ன ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன என்று சுயநலம் கொண்டு ஓடியவர்களும் உண்டு. நீரோட்டத்தை கடக்க நீந்தி மக்களை கரை சேர்த்த நல்லவர்களும் உண்டு.

போகும் வழிகளில் ஏராளமான குண்துதாக்குதல்கள் உயிரை கையில் பிடித்த வண்ணம் ஒரு வழியாக முகமாலை வந்தடைந்தோம்

எழுத்து- எஸ்தர்.


தொடரும்.....

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

என்னை வாழ விடு

உன் காதல் நாடகம் போதும்
என்னை விட்டு விலகி விடு
காதலே வேண்டாம்
என்றிருந்த நெஞசில் காதலை
நீ விதைத்தாய்
விருட்ச்சமாய் அது பிரகாசிக்கும்
நேரம் விதி என்கிறாய்

நெருப்பை குளிர் நிலவென
நினைத்தேன் - என்
தவறுதான் - ஆசை மொழி
பேசிய உன்னில் அசடு
வழிந்தது என் தவறுதான்...
போதும் இனிமேல் போதும்
என்னை விட்டு விடு வாழவிடு

போ நீ போ
போகும் போது உன்
நினைவுகளையும் எடுத்துச் செல்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்க எனக்கு விருப்மில்லை
காதலின் சுவட்டை மறக்க செய்
நீயே எனக்கோர் பாடம்
நீயே சதிகாரர்க்கு உதாரணம்

போதும் விலகி விடு
என்னும் உன் கதல் வலையில்
சிக்குவேன் என நினைக்காதே
பனி துளி போல் ஆனது
உன் காதல் - ஆனால்
என் காதல் சமுத்திரம் போன்றது.
என்றும் நிலைக்கும் - போதும்
என்னை வாழ விடு

புதன், 25 ஏப்ரல், 2012

மரமே மரமே நீயின்றி நாங்களில்லை

ஒற்றை காலில் நின்று
எமக்காய் தபம் புரிகிறாய்
நிழல் தர
உன்னை போல் பிறரன்பு
கொண்டவரை
மானிடரில் நான் காணவில்லையே

தொட்டிலும் உன்னாலே
பாடையும் உன்னாலே
மனித வாழ்கையில் உன்னை
பிரித்து விட முடியாதே

நகர மயமாக்கல் எனும் போர்வையில்
உன்னை வெட்டி சாய்கின்றனரே
இந்த நெறி கெட்ட மானிடர்
உன் பலன் அறியாது.

காற்றும் உன்னாலே
மழையும் உன்னாலே
மருந்தும் உன்னாலே
நாம் உண்ணும் உணவும் உன்னாலே

உன்னில் பயன்படா உறுப்புக்கள்
உள்ளனவோ பிற உயிர்க்கு
உன் இலை முதல் விதை வரை
எல்லாம் எமக்காகவன்றோ

உயிர் எடுக்கும் நஞ்சையும்
நீ கொண்டுள்ளாய்
உயிர் காக்கும் மருந்தையும்
நீ கொண்டுள்ளாய் - தேர்வு
செய்வது மானிடரின் பொறுப்பன்றோ

உன்னை கொன்று குவித்து
மானிடர் தமக்கே தாம்
கேடு விளைவிக்கின்றனர்
நீயின்றி அவர்கள் இல்லை என்
அறியாது

மரமே உனக்கு தெரியுமோ
எனக்கு தெரியாது
மரமே மரமே நீயின்றி
நாங்களில்லை

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

மரித்துப் பிளைத்தவள் 01

பீரங்கிகள் முழங்க கொண்டாடிய என் முதலாவது கிறந்த தினம்.

நான் என் தாயின் வயிற்றில் உதிக்கும் போதே என் நாடு யுத்த மயமாய்தான் இருந்தது. 1992 கார்த்திகை 15 நான் யாழ்ப்பாண பூமியில் பிறந்தேன். நான் பிறக்கும் போதே இலங்கையில் யுத்த நிலை மோசமாய் அமைந்தது..

ஆகாய தாக்குதலின்
நினைவுத் துாபி
1993 என் முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக பல ஏற்பாடுகள் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது. என் அக்காமார் சித்திமார் என்று பலரும் கொண்டாட்ட வேலைகளிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 13ம் திகதி ஆகாய விமானத்தின் மூலம் என் குருநகருக்கு எதிரே இருக்கும் கல்முனை எனும் இடத்தில் இருந்த புலிகளின் முகாமை இலங்கை ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அது போல் யாழ்ப்பாண் கோட்டையிலுமிருந்து கல்முனைக்கு தாக்குதல் நடத்தினர். ஆனால் அந்த குண்டுகளும், எறிகணைகளும் பெரும்பாலும் வீழ்ந்தது.என் ஊருக்குள்தான். (குருநகர்). குருநகரில் ஓங்கி உயர்ந்திருந்த புனித யாகப்பர் ஆலயம் குண்டு தாக்குதலால் தவிடு பொடியானது.. அதுமட்டுமல்லாது பல வீடுகளும் சிதைந்தன, பல உயிர்களும் மாண்டன.

புனித யாகப்பர் ஆலயத்தின்
தற்போதைய தோற்றம்

இதற்கிடையில் கரையோர பிரதேச மக்களை இடம்பெயர்ந்து உள்ளுக்குள் பிரவேசிக்குமாறு இலங்கை ராணுவம் அறிவித்தது. கையில் சிக்கியவற்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஆணை கோட்டை, பண்டத்தரிப்பு பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தோம். வீதியால் நடக்கும் போதே கெலிகாப்டர்களும், சுப்பர் சோனிகளும் பீதியை ஏற்படுத்தின. ஆனாலும் வீதி ஒவவொன்றிலும் பல பதுங்கு குளிகள் பொதுமக்களால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வெட்டப்பட்டிருந்தது. ஆகாய விமானங்கள் தாக்கும் வேளையில் எல்லோரும் அடிபட்டு இடிபட்டாவது பதுங்கு குளிகளுள் புகுந்து ஒளிந்து கொள்ளுவோம் அது போனதும் எம் இடப் பெயர்வை ஆரம்பிப்போம்.

13ம் திகதி இரவே ஆணைக் கோட்டையை அடைந்து அகதி முகாம்களை அமைத்து தங்கினோம்.14ம் திகதி விடிந்தது. அது பயத்தோடும் பீதியோடும் கடந்தது.

மறு நாள் 15 என் பிறந்த தினம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பலகாரங்களை என் அக்காமார் பத்திரமாக கொண்டு வந்தனர்.அங்கே அகதி முகாமில் தங்கியிருந்த அனைவருக்கும் அவை பகிர பட்டுக் கொண்டிருக்கையில் தீடீர் என்று எங்கள் கூடாரத்துக்கு அருகில் பாரிய வெடி குண்டு வெடித்தது எல்லோரும் சிதறி திக்கு திசை தெரியாமல் அலறி ஓடினர்.அக்குண்டு வெடிப்பில் பல உயிர்கள் போனது.எங்கும் அழுகையும் பலம்பல் ஓலங்களுமாய் இருந்தன. அந்த வெடிப்பில் தம் உறவினரும் இறந்திருப்பாரோ என ஓலமிட்டவர்களும், தடுமாறி ஓடியதில் குடும்பத்தை தவறவிட்டவர்களில் புலம்பலும் ஒங்கி ஒலித்து நின்றது.

அந்த வேளை என்னை வைத்திருந்தது என் சின்ன அக்கா அப்போது அவளுக்கு 11 வயதுதான் இருக்கும். அவளும் நானும் குடும்பத்தை தவற விட்டு அழுதபடி அங்குள்ள அடைக்கல மாதா கோவிலில் இருந்தோம். வெகு நேரம் கழித்து ஒருமரத்தின் கீழ் அழுதபடி இருந்த என் அம்மாவையும் மற்றவர்களையும் கண்டு பிடித்தோம்...அந்த நாள் என் குடும்பத்தினரால் இன்று வரை மறக்கப்படாத நாள்........

(என் முதல் வயது அனுபவங்கள் எனக்கு ஞாபகம் இல்லாத படியால் இவற்றையெல்லாம் என் அம்மாவின் துணை கொண்டு எழுதினேன்.)

அனுபவங்கள் தொடரும்.......எஸ்தர்

சனி, 21 ஏப்ரல், 2012

அமைதி இழந்த ஆத்மாவின் கதறல்

நன்றி கூகிள்
அமைதி தேடும் என்
ஆன்மாவின் கதறல்
நிம்மதி வருமோ என
ஏங்கும் என் நெஞசம் - என்
வாழ்கை ஓர் சிறுகதை - அதில்
சோகம் ஓர் தொடர் கதை
எனக்கிரங்குவார் யாருமில்லையோ??

பகலில் வெம்மை போல்
சுடு மொழிகள் எனை வாட்டுகின்றது.
இரவில் நிசப்தமாய் பயம்
எனை அலற வைக்கிறது
என் கைகள் தழர்ந்தன.
என் கால்கள் வலுவிழந்தன.
இத்துயரை விட்டு நீங்க வழியில்லையோ

வசந்தம் என் வாழ்வைவிட்டு போனது
சோகம் எனை துரத்துகின்றது - என்
நண்பரும் என்னை பிரிந்தனர் என்
உறவுகளும் என்னை பகைத்தனர்
என்னை புரிவார் யாரும்
இல்லையோ இவ்வுலகில்...........

வியாழன், 19 ஏப்ரல், 2012

யுத்த களத்தில் பூத்த காதல்

நேற்று நான் என் அத்தை வீட்டுக்கு போயிருந்தன் அப்போ வன்னி யுத்தத்தின் பின் புணர் வாழ்வு நிலையத்திலிருந்து விடுபட்டு வந்த குடும்பம் ஒன்றை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரியோர்கள் எல்லாரும் கூடியிருந்த இடத்தில நானும் போய் உட்கார்ந்தேன். சரிதான் பாட்டி என்ன பாத்து பெரியாக்கள் இருக்கிற இடத்தில உனக்கு என்ன வேல எழும்பி போ என்றார். நானும் முகம் சுழித்த படியே எழும்பினன். றொம்ப வருசத்துக்கு பிறகு பார்த்தவர்களுக்கு என்னை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். (ஏனென்றுதான் தெரியுமே).

கூகிளில் பறிச்சது
எனக்கு பக்கத்தில கிட்டத்தட்ட 24 வயது நிரம்பிய ஒரு அக்கா இருந்தாங்க அவங்களும் புணர் வாழ்வு நிலையத்திலிருந்து வந்தவங்கதான். அவங்கள பிடிச்சு வன்னி யுத்தத்தை பற்றி கொஞ்சம் கேட்டா பிளாகரில போட்டு தாக்கலாமே என்று நானே கதைய தொடக்கினன். உங்களுக்கு என்ன பெயர்? என்று பிறகு சொல்லவே தேவலங்க முதல்ல என் கதைய கேட்டு முடிச்சு அப்புறமா அவங்க தன் கதைய சொன்னாங்க முதல்ல யுத்த சம்பவங்களை கேட்டா என் கண்ணிலிருந்து யமுனா பட படவென ஓடுவா. ஆனா இவங்க கதை றொம்ப சுவாரஸ்யம் கலந்த சோகமாக இருந்தது. இத சொல்லி முடிச்சதும் அவங்க ஒரு விடயம் சொன்னாங்க தயவுசெய்து இத யாருக்கும் சொல்லிடாதேயும்.

சரி அதை உங்களுக்கு சொல்லிடுறன். இதையெல்லாம் ரகசியமா வைச்சுக்கப்படாது. யுத்த நேரத்தில் வன்னியில் (கிளிநொச்சியில) ஜெயபுர காட்டுக்குள் இவரும் இவரது தோழிகள் சிலரும் சில சிங்கள ராணுவத்தினரிடம் மாட்டி கொண்டார்கள். இவரது குடும்பத்தை பாலாவி எனும் இடத்தில் இவர் தவற விட்டு விட்டார். இவர் மாட்டி கொண்ட சிங்கள ராணுவத்தினரில் 05 பெண் சிப்பாய்களும்.10 க்கு மேற்பட்ட ஆண் சிப்பாய்களும் இருந்தனராம். ஆனால் இவர்கள் 04 பேர். இவர்கள் பிடிபட்ட நேரம் முள்ளிவாய்கால் தவிர மிகுதி எல்லா இடமும் ராணுவத்தினர் வசம் இருந்தது. இவர்கள் மாட்டி கொண்ட சிங்கள ராணுவத்தினரும் தம் படைப் பிரிவை தவற விட்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது.


இதுவும்தான்......
என்றாலும் அவர்கள் இவர்களை துன்புறுத்தவில்லை (ஆகா றொம்ப ஆச்சரியமா இருக்கல்ல) .தேவையான உணவுகள் கொடுத்து பராமரித்து வந்தனர். இவர்கள் மாட்டி கொண்ட இடம் காடு என்பதால் ஊர் எல்லை தெரியவில்லை எல்லோருக்கும் புதிய இடமாக தெரிந்தது.கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் அவர்களது கட்டுப்பாட்டில் பேணியில் அடைக்கப்பட்ட மீன் துண்டுகளை உண்டு வந்தார்கள். இதில் அஸங்க எனும் சிப்பாய் உருவர் அந்த அக்காவிடம் மிகுந்த கரிசனையாக நடந்து கொண்டாராம். (காதலாம் - கல்லுக்குள்ளும் ஈரம் உண்டுதான்)போக போக அந்த அக்காவுக்கும் அவர் மேல் காதல் கொண்டாராம்(பாருங்கப்பா அங்க நாடே இரத்த வெள்ளத்தில் மிதக்கிற நேரம்...). இதற்கு அங்க இருந்தவங்களெல்லாம் உதவிகரம் நீட்டினார்களாம்..மொழியே புரியாத நிலையில் காதல் அப்பப்பா(காதலுக்கு மொழி தேவயில்லதானே) அதன் பிறகு அந்த அக்கா அவங்கட தோழகள் உட்பட 04 பேரையும் புணர் வாழ்வு நிலையம் சேர்த்தவரும் அவர்தானாம்.(எப்படி சேர்தார் என்று அந்த அக்கா சொல்லமாட்டெங்கிறா).

இப்பவும் அஸங்க நினைப்புதான் அந்த அக்காவுக்கு அஸங்க மாட்டர் வீட்டில தெரிஞசா, எல்லாரும் உச்சி திறந்து ஊறுகாய் போடுவினமாம். பட் இதுல என்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் இப்பவும் ரெண்டு பேருக்கும் தொடுசல் இருக்காம். அக்கா பாவம் ஆகா ஓன்று மறந்துட்டன். அந்த அக்காவுக்கு பெயர் சாம்ளா. காதல் கனிய வாழ்த்துக்கள்.

புதன், 18 ஏப்ரல், 2012

தமிழ் சினிமாவின் கலைவாணிகள்

நம் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று பெயர் தந்தவர்கள் சிலர். சினிமா என்பது பல துறைகளின் கூட்டு முயர்ச்சியால் உருவாக்கப்படும். ஒரு பொழுது போக்கு துறை.அந்த வகையில் இதில் தடம் பதித்த பெண்கள் சிலரே. அவற்றுள் தற்போது சினிமாவின் முக்கிய துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் பெண்களை பற்றியே நான் பேசுகிறேன். சினிமாவின் முக்கிய துறைகளில் இசை,நடிப்பு இன்றியமையாதது. இவற்றை தம்வசப் படுத்தியவர்களுள் முக்கியமான இரு கலைவாணிகளை பற்றி பேசப்போகிறேன்.

ஆன்ரியா

இவர் இன்றைய நடிப்புலகில் நம்பப்படும் நாயகிகளில் ஒருவர். பச்சை கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆயினும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமே நட்ச்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. அதன் பின் இன்று உலக நாயகன் கமல்காசனின் ஆஸ்தான நாயகி ஆகிவிட்டார். அவரின் விஸ்பரூபம் திரைப் படத்தில் இவர்தான் நாயகி. தொடர்ந்து சிம்புவுடன் வடசென்னைலும் நடித்து வருகிறார்.

நடிப்பு உலகத்தினர் சினிமாவில் இவரை தரிசித்ததை விட இசைப் பிரியர்கள் இவரை நன்கு அறிவார்கள் இவர் பிரபல பின்னனி பாடகியும் கூட. யுவன் முதல் தே.ஸ்ரீ.பிரசாத் வரை தற்போதைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.அவற்றில் இது வரை இல்லாத உலகிது , நோ மணி எல்லாம் வெற்றிப்பாடல் வரிளையில் உள்ளன. அது மட்டுமல்ல இவர்தான் நண்பன் திரைப்படத்தில் இலியானாவுக்கு குரல் கொடுத்தவர். பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். ஆன்ரியா என்னும் மென்மேலும் வளர அவரது கலைப்பணி சிறக்க நாமும் வாழத்துவோம்.

ஸ்ருதி காசன்

7ம் அறிவு மூலம் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வரப்பட்டவர் ஸருதி. இவர்.நடிப்பிற்கு வரும் முதலே இசையின் மூலமே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் இவர்தான. அதன் பின் இன்று உலக புகழ் பெற்ற வை திஸ் கொல வெறி காரியும் இவர்தான். இன்று தமிழ் சினிமாவின் முன்னனி நாகியாக உருவெடுப்பார் என் திரை உலகத்தினரால் நம்பப்படுகிறது..அது மட்டுமல்லாது பினனி பாடகியாகவும் உள்ளார் .

அது மட்டுமல்ல பாப் ஆல்பங்கள் வெளியிடுவதிலும் இவர் கெட்டிகாரி. ஸ்ருதியும் வளர நாம் வாழ்த்துவோமாக.

திங்கள், 16 ஏப்ரல், 2012

கல்வியால் பிளந்த காதல்

தொலையப் போவது - என்
இதயம் என தெரிந்தும்
முழு மனதோடே தொலைத்தேன்
உன்னிடம்......

இயற்கை கொண்ட விருப்பம்
நம்மை காதலர்களாய்
மாற்றிப் பார்த்தது - அதே
இயற்கை கொண்ட முடிவுதான்
நம்மை காதலெதிரிகளாய்
மாற்றிப் பார்த்தது.

காதலிக்கும் போது கேட்டாய்
என்னை எங்கு வைத்துள்ளாய் என்று
சோனையறையில் என்றேன்
வலதா? இடதா? என சோதித்தாய்
இரண்டிலும் என்றேன். அறியாது
அப்போ மற்ற இரண்டிலும்
யார் என்றாய் ??
நான் கலைப் பிரிவு - நீயோ
மருத்துவ பிரிவு என நமக்குள்
இருந்த கல்வி
பிரிவை காட்டி விட்டாய்

அன்றோடே உனக்கு போய் வருகிறேன்
கூறினேன்
அன்றோடே பிளந்தது நம்
காதலும்
நாம் தேர்ந்த கல்வியால்...

சனி, 14 ஏப்ரல், 2012

இன்று திருநங்கைகள் தினம் (சித்திரை 15) அவசியமா?


இன்று திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் திருநங்கையர் தினம் அவசியமா? என கேள்வி எனக்கு எழுகின்றது.

திருநங்கைகளை பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை கொண்டுள்ளனர். நான் என் வலை பதிவில் அதிகம் பேசும் விடயம் திருநங்கைகள்  காரணம் நானும் ஓர் திருநங்கை(பெண்). இன்று தமிழ் நாட்டில் திருநங்கைகள் தினம். அனுஷ்டிக்கப்படுகின்றது. இது போற்றுதற்குரிய விடயம்.இந்திய சமூகத்தில் பிச்சை கேட்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாக மாத்திரம் அறியப்பட்டவர்கள் திருநங்கைகள். அதையும் தாண்டி இன்று அவர்கள் முன்னேறி வருகின்றனர் குடும்பம் அவர்களை ஆதரிப்பதை பொதறுத்தே சமூகம் அவர்களின் நிலையை தீர்மானிக்கும்.

இன்று குடும்பத்தால் பெண்ணாக ஏற்று கொள்ளப்பட்ட பல திருநங்கைகள் மதிப்புமிக்க இடத்தில் இருக்கின்றனர். சாதிக்கின்றனர் ஒதுக்கப்பட்டவர்களில் ஓங்கி ஒலிக்கும் சங்கொலியாய் திளழ்கின்றனர். இவர்கள் எல்லாம் திருநங்கை என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து பெண் என்ற வட்டத்துக்கள் சேர்ந்தவர்கள். பல திருநங்கைகள் படிப்பறிவின்றி தவறான வழியில் நடக்கின்றனர் இதற்கு காரணம் இவர்களின் குடும்பமே.

பலர் திருநங்கைகளை ஆணுமில்லை பெண்ணுமில்லை என்றெல்லாம் வர்ணிப்பார்கள். இக்கருத்தை நான் முற்று முழுதாக எதிர்கிறேன்.ஆணில்லை இதை நான் ஏற்கொள்கிறேன் நாங்கள் ஆண் இல்லாத படியால்தான் பெண்ணாக வாழ்கிறோம். அதென்ன பெண்ணுமில்லை. நானும் ஓர் பெண்தான் திருநங்கைகளும் பெண்கள்தான். எங்களை மூன்றாம் பாலினம் என்று கூறுவதை விட அவர்களும் பெண்கள்தான் என்று கூறுவது விரும்பதக்கது.

சில திருநங்கைகள் திருநங்கை திருநங்கை என்று அந்த வட்டத்துக்குள்ளேயே நிற்கின்றனர். அதற்கடுத்தாக பெண் என்ற வட்டத்துக்குள் வர முயர்ச்சிப்பது கிடையாது.

துாற்றும் உலகம் துாற்றட்டும், போற்றும் உலகம் போற்றட்டும். அதை பற்றி என்ன கவலையும் கொள்ளாது நீதியின் பாதையில் நடப்போமெனில் வெற்றி நமக்கே............

இப்படிப்பட்ட ஓர் நிலையில் திருநங்கைகள் தினம் அவசியமா? என எனக்கு கேள்வி எழுகிறது. சமூகத்தில் முழுமையான அங்கீகாரமில்லாமல் , மழு சுதந்திரம் இல்லாமல் இது கொண்டாடப்படுவது எனக்கு விருபமில்லாத விடயமாக தெரிகிறது. இந்த திருநங்கையர் தினத்தை முன்னெடுப்போர் திருநங்கைகளுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசாங்கத்தின் முன் கூக்குரல் எழுப்பியிருந்தால் அது சந்தோஷம். சிந்தித்தால் வழியுண்டு.

இன்று திருநங்கைகள் தினம் என்பதால் சில வெற்றி திருநங்கைகளை பற்றி பார்ப்பது என் பதிவக்கு வலு சேர்க்கும் என நினைக்கிறேன்.

கல்கி சுப்ரமணியம்

முழுக்க முழுக்க திருநங்கைகளுக்கென சகோதரி அமைப்பை நிறுவியவர். அதுமட்டுமன்றி திரைப்பட கதா நாயகியுமாவார். நர்த்தகி திரைப்படத்தின் காதாநாயகி இவர். இத்திரைப்படம் ஜேர்மன் திரைப் பட விழாவில் தேர்வாகியிருப்பது குறிப்பிடதக்கது. அது மட்டுமன்றி இப்போது ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

ரோஸ் வெங்கடேஷன்
ஊடகத்தில் பிரபலமாக அறியப்பட்டவர் இவர். ரோஸ் என்பதை விட இப்படிக்கு ரோஸ் என்றாலே எல்லோர்க்கும் தெரியும். ரோஸி ரோஸ் என்ற பாப் ஆல்பத்தை இவர் மிக விரைவில் வெளியிட உள்ளார்.

ரேவதி


தெனாவட்டு திரைப்படத்தில் திரையுலகில் அறிமுகமானவர் இவர். அதுமட்டுமல்ல உணர்வும் உருவகமும் என்ற திருநங்கைகள் பற்றிய நுாலை எழுதியுள்ளார். இவர் மிக சிறந்த எழுத்தாளரும் கூட.

ப்ரியா பாபு

கண்ணாடி என்ற அமைப்பை நிறுவி. திருநங்கைகளுக்காக போராடும் ஒரு சமூக போராளி.


ஆஷா பாரதி

திருநங்கைகளுக்கென தினியார் நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தொண்டாற்றி வருகிறார்.

நர்த்தகி நட்ராஜ்

பிரபல பரத நாட்டிய கலைஞர். தமிழ் நாட்டிக் கலை மாமணி உட்பட பல விருதுகளை வாரி குவித்தவர். இந்தியாவில் தமிழ் நாட்டில் பெண் என்ற அங்கீகாரத்தோடு கடவு சீட்டு பெற்ற முதலானவர் இவர். அமெரிக்க உட்பட உலகின் பிரபலமான இடங்களில் நாட்டியம் ஆடி இந்தியாவிற்கு பெருமை
சேர்த்தவர்.

ப்ரியா மிர்ஷா

காஞ்சனா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இவர். அதன் பின ஏற்பட்ட விபத்தால் தேடிவந்த படங்களை தவிர்த்தார் இவரும் ஓர் மொடல் அழகி.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

காலம் தவறி பொழிந்த காதல் மழை

தேடுகிறேன் இப்போது - உன்னை
அழுகிறேன் நினைத்து
நீ எங்கே என தேடி புலம்புகிறேன்

சூரியன் போன பின்
மலர துடிக்கும்
தாமரை முகை ஆனேன்
கலையற்ற பெண்மானானேன்
எங்கே சென்றாய் எனை விட்டு

உனை எண்ணி என்
கண்கள் கடல் சமைக்கின்றன.
என் கால்கள் வலுவிழந்தன.
என் கைகள் தழர்கின்றன
நாரை கால் போல ஆனது தேகம்

நீ காதலுற்ற போது - என்னிடம்
காதல் இல்லை
இப்போது நான் காதல்
கொண்ட போது நீயில்லையே
மழை ஓய்த பிறகும் கூதலாய்
வந்திற்றே உன் மேல் காதல்.

தொடருமோ என் கண்ணீ பயணம்
நிறுத்த நீ வருவாயா?
உனை எண்ணி
கண்ணனுக்காய் காத்திருக்கும்
மீராவைப் போல்
உணக்காய் என்றும் காத்திருப்பேன்

காலம் தவறி பொழிந்த மழையால்
என்ன பயன் எனகிறது உலகு?
வினாவிற்கு விடை கூற
விரைந்து வா - என் தலைவா..

புதன், 11 ஏப்ரல், 2012

விதவைகள் என்றால் தபோதனர்களா?????

பொற்றாலியோடே எல்லாம் போம் என்பது பெரியவர்கள் கூற்று.இதன் அர்த்தம் என்னவென்றால் கணவன் இறந்த பின் பெண்ணுக்கு தாலியறுக்கும் நிகழ்வுக்குப் பின் அவள் வெறும் யடம் என்பதாகும்.
சங்ககாலம் முதல் பாரதி காலம் வரைக்கும் பெண்களின் நிலை படு மோசம் இருபதாம்,இருபத்தோராம் நுாற்றாண்டுகளில் அவர்கள் அறிவு தெளிந்து சிந்தை அறிந்து செயற்பட ஆரப்பிதது விட்டார்கள் (100க்கு75வீதமானோரே)இங்கு நான் குறித்து பேச இருப்பது தமிழ்ப்பெண்களை பற்றியே...

ஜரோப்பிய நாடுகளில் அன்று தொட்டு இன்று வரை சமூககட்டமைப்புகள் சட்ட திட்டங்ககள் வேறு. பெண்ணடிமை இருந்தாலும் குறித்து சொல்லக்கூடிய அளவிலேயே இருந்தது.அதாவது சமாரியர்கள்,எத்தியோப்பியர்கள்,எஸ்தோயிக்கர் போன்ற சமூகங்களிலேயே இப்படிப்பட்ட பெண் அடிமைகள் இருந்தன

சரி தலைப்புக்கு வருவோம் நம் தமிழ் பெண்கள் சங்க காலம் முதல் பலவேறு விதமாக சங்கடங்களுக்குள் சிக்கி வாழ்ந்து வருவது நாம் எல்லோரும் அறிந்ததே.சங்க காலத்தில் மடலேறல்,வேரிபாய்தல் என்பவை ஆண்ககள் தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் வகைகள்.இவை அவர்கள் தங்கள் காதலில் தோல்வியுற்ற வேளைகளில் இவ்வாறு தம் உயிரை மாய்த்து கொள்வர்.இது கட்டாயம் என்பது கிடையாது.அவரவர் விருப்பம் ஆனால் பெண்களின் நிலை அவ்வாறு கிடையாது.போரிலோ அல்லது நோயிலோ கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுதல் அல்லது வீட்டில் முடி கத்தரித்து வெள்ளை அல்லது காவி உடை தரித்து மூலையில் உட்கார வைத்து வெளியே போகவிடாமல் சுப நிகழ்வுகளில் பங்கேற்றக விடாமல் அவர்களை ஒரு பிணத்தை போல நடத்துவது என்று அவர்களுக்கான அடக்கு முறைககள் காணப்பட்டது.

சங்கமருவிய காலத்திலும் சரி சோழர் காலத்திலும் சரி அதன் பின் வந்த காலங்களிலும் இவ்வாறுதான் பெண்கள் நிலை காணப்பட்டது.பாரதி காலத்துக்குப்பின்னரே பெண்விடுதலை ஆரம்பித்தது என்று கூறலாம்.ஆனாலும் இதற்கான விதை சோழர்காலத்தில் இடப்பட்டது.ஏனெனில் காவிய நாயகிகளாக பெண்களை வைத்து புலவர்கள் காவியம் படைக்க ஆரம்பித்தது இக்கால கட்டங்களில்தான் உதாரணமாக இளங்கோ அடிகளாரால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை கூறலாம்.

ஆனாலும் பாரதி காலத்தின் பின் விடுதலைக்கான போராட்டங்ககள் வெற்றி காண ஆரம்பித்தது.இக்கால கட்டங்களில் வடக்கில் பெண்கள் வாளெடுத்து போரும் புரிந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.உதாரணமாக ஜான்சி ராணி லக்ஸ்மி பாய்யை கூறலாம்.

இன்று பெண்களின் நிலையையும் முன்னேற்றத்தையும் நாம் மெச்சவே வேண்டும்.சங்ககாலத்து பெண்களின் வாழ்வுக்கு முற்றிலும் நேர்மாறாக வாழ்கின்றனர் நம் தற்கால தமிழ் பெண்கள்.கணவன் இறந்த பின்னும் தாம் வேலை செய்து தம் பிளைப்பை பார்க்கும் பெண்களும் மறுமணம் செய்து வாழும் பெண்களும் உண்டு. இது வேறு இன்று ஆண்களுக்கு நிகராக பெண்ககள் களமிறங்கி சகலத்திலும் செயற்படுகின்றனர்.

ஆனாலும் இப்போதும் கூட சில பிராமண வகுப்புகளில் பழமை போற்றும் வாதிகளால் பெண்கள் முன்னேறாமல் அக்கால வாழ்க்கை போலே வாழ்கின்றனர்.தலைமுறைககள் எவ்வளவோ மாறி விட்டது இருந்தும் இப்படிப்பட்ட சில சமூகங்களால் பெண்கள் வெளியுலகு தெரியாமல் இருப்பது வருந்தத்தக்கது.இந்நிலையும் மாறி புது உலகு படைத்திட எழுவோம் பெண்மை போற்றுவோம்

திங்கள், 9 ஏப்ரல், 2012

தமிழ் பெயர் இருந்தாலா ஒரு தமிழன் தமிழ் வளர்க்க முடியும்?

இந்த பதிவை நான் ஏன் பதிகிறேன் என்றால் நேற்று ஒருவர் என் முகப்புத்தகத்தில் உரையாடி கொண்டிருக்கையில் என்னுடைய பெயர் தமிழ் பெயர் இல்லையாம். பிறகு ஏன் தமிழுக்காக உழைக்கிறிங்க உங்க பெயரை மாத்தலாமே சகோதரி என்றார்.நான் அவருக்கு பதில் எதுவும் கூறவில்லை. முகப்புத்தகத்தில் இருந்து வெளியேறி விட்டேன். பிறகு சிந்தித்தேன் அப்போதுதான் பல விடைகள் எனக்கு கிடைத்தன.

அரசி.. எஸ்தர்
கிறிஸ்தவர்களுக்கு பெரும்பாலும் தமிழ் பெயர்கள் கிடையாது. எல்லாம் யூத, எபிரேய, போர்த்துக்கேய, மற்றும் ஆங்கில மொழி பெயர்கள் வைக்கப்படுகின்றன. திருவவிலியத்திலிருந்தும், கிறிஸ்தவத்திற்காக உழைத்த பெரியார்களாகிய புனிதர்களின் ஞாபகமாகவும் அப்பெயர்கள் வைக்கப்படுகின்றன. எனினும் சில பெயர்கள் தமிழுக்காக திரிபடைந்த பெயர்களாக உள்ளன.உதாரணமாக தமிழில் அந்தோணி எனும் பெயர் ஆங்கிலத்தில் அன்ரனி என்பதாகும் ஆனால் இப்பெயரின் மூல மொழி போர்த்துக்கேயமாகும். ஏனெனில் அந்தோணியார் ஒரு போர்த்துக்கேயர். அவரை போர்த்துக்கேயத்தில் அன்ரோனியோ என்று அழைப்பர். அன்ரோனியோவிலிருந்து அன்ரனி பிறந்தது, அன்ரனியிலிருந்து, அந்தோணி பிறந்தது. இதுவே கிறிஸ்தவ பெயர்களின் அடித்தளம். சரி என் விடயத்துக்கு வருகிறேன்.

யாழ்ப்பாண நுாலகம்
என் பெயர் (எஸ்தர்) ஏறக்குறைய 2800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு யூத பெயர். எஸ்தர் அரசி யூத, கிறிஸ்தவ பெண்களின் காவிய நாயகி அமைதியின் சொரூபம். அதனால்தான் நானும் அப்படி இருக்க வேண்டும் என்று என் சடங்கின் பின் திருமுழுக்கின் போது இப்பெயர் எனக்கு சூடப்பட்டது.

புனித.பத்திரிசியார்
கல்லுாரியல் அமைந்துள்ள
அருட்தந்தை லோங் அவர்களின்
உருவ சிலை
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றின் அதிக தமிழ் இலக்கியங்களை ஈழத்தில் விட்டு சென்றது கிறிஸ்தவ பாரிதியார்கள். இவர்களுக்கென்ன தமிழ் பெயரா இருந்தது. தமிழை வளர்த்தார்கள்தானே. ஏன் அயர்லாந்திலிருந்து அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மதிப்புக்குரிய அருட்தந்தை லோங் அடிகளார் யாழ்ப்பாண நுாலகத்தின் இணையற்ற செல்லம் என வர்ணிக்கப்படுகிறார். அவர் என்ன தமிழனா அல்லது தமிழை தாய் மொழியாக கொண்டவரா? இல்லையே

வீரமா முனிவர்
ஏன் இந்திய தமிழ் மக்கள் வீரமா முனிவர் என்று அழைக்கப்படும் கொன்ஸ்ரன்ரைன் யோசேப் பெஸ்கி என்பவர் பற்றி இறியாதவர்களே இருக்க மாட்டார்கள் தமிழ் இலக்கியத்திற்காக சதுரகராதி, தேம்பாவணி போன்ற இலக்கிய படைப்புகளை செந்தமிழ் தன் கைபட எழுதியவர். அவர் ஒரு இத்தாலி நாட்டவர். இலத்தீனை தாய் மொழியாக கொண்டவர். ஆனாலும் இந்தியா வந்து கிறிஸ்தவத்திற்காகவும் தமிழுக்காககவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மொத்தத்தில் பார்க்கப் போனால் தமிழ் வளர்க்க தமிழ் பெயர் மட்டும் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது , தமிழனாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது, தமிழ் மேல் பற்றிருந்தால் போதும். நானும் என் பெயரை  மாற்ற வேண்டிய தேவையும் இல்லை....

புதன், 4 ஏப்ரல், 2012

புனித வாரத்தின் புனித நாட்கள்

இந்த வாரம் கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் புனித வாரம். இயேசு பெருமான் மானிடர் கறை போக்க இரத்தம் சிந்த ஆயத்தமாகும் உச்சக் கட்ட நாட்கள்.இதில் சிறப்பு மிக்கவை புனித வியாளன் மற்றும் புனித வெள்ளி இவற்றின் வரலாறு பலர் அறிந்திருக்கலாம் , அறியாமலும் இருக்கலாம் சும்மா படிச்சு பாருங்கோவேன்.

புனித வியாளன்.
இயேசு என்பவர் மானிடராய் இவ்வுலகில் வாழ்ந்தார். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் மித மிஞ்சி இருக்கின்றன. யேசு போதித்தது யூதநெறி கொள்கைகள் எனினும் இயேசுவின் போதனைகளை பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என கி.பி 50ம் ஆண்டுகளின் பின் அழைக்கப்பட்டனர்.

யேசுவின் போதனைகள் பல யூத பெரியார்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாய் அமைந்தது. இதனால் அவர்கள் இயேசுவின் மேல் பொய் குற்றம் சாட்டி கொலை செய்ய தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் யேசுவை அவர் சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத் என்பனை பணத்தாசை காட்டி மயக்கி அவரின் இரவுணவின் போது கைது செய்தனர். திருவிவிலியத்தின் படி கூட்டி கழித்து பார்த்தால் அது ஓர் வியாளக்கிழமை அன்றே தொடங்கியது யேசுவின் பாடுகள்.

இதனை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருப்பலி மூலம் ஒவ்வொரு நாளும் நினைவு கூர்ந்த வண்ணம் உள்ளனர். எனினும் அனைத்து கிறிஸ்வர்களாலும் பெரிய (புனித) வியாளன் என்று கூறப்படும் தினத்தில் நினைவு கூரப்படும். இதற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடுகளும் சடங்குகளும் இடம் பெற்ற வண்ணமே இருக்கும். இது ஆதி கிறிஸ்தவ சமூகங்களில் இருந்து பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஓர் வழிஆராதனை முறையாகும். அத்தோடு யேசு அன்னாளில்தான் தம் சீடர்களின் பாதங்களை கழுவி தன் தாழ்மையை உலகிற்கு வெளிப்படுத்தினார். இதனை நினைவு கூர்ந்தும் பல விதமான சடங்குகள் தேவாலயங்களில் இடம் பெறும்.

இலங்கையை பொறுத்த மட்டில் தேவாலயங்களில் மட்டுமல்ல வீடுகளில் கூட பசான் எனப்படும் ஒருவகையான துக்க ஒப்பாரி ஓலங்கள் இசைக்கப்படும். இது யேசுவின் துன்பமான சிலுவை பயணத்தின் 14 துயர நிலைகளையும் கூறி நிற்கும்.

புனித வெள்ளி
இது யேசு கிறிஸ்து மும்மணி நேரம் சிலுயைில் தொங்கி இறந்த தினமாகும் இந்த நாள் கிறிஸ்தவர்களின் கறுப்புதினமாகும். கூடுமானவர்கள் இந்த நாளில் உணவை தவிர்த்து ஜெபம், தபம், விரதம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பர் மற்றவர்கள் மச்சம் மாமிசம் தவிர்த்து கூடியவை அமைதியை கடைப் பிடித்து அதை ஓர் துக்க தினமாக அனுஸ்டிப்பர்.

தேவாலயங்களில் இவற்றை நினைவு கூரும் விதமாக பாஸ்கு எனக்கடும் சடங்கு முறையிலான வழியாடு இடம் பெறும் இது பொதுவாக கத்தோலிக்க தேவாலயங்களிலேயே இடம் பெறும்.

மற்றய கிறிஸ்தவர்கள் தொடர் ஆராதனைகளில் பங்கு பற்றுவர். ஆனால் ஜெபம், விரதம் என்பவை சகல கிறிஸ்தவர்களும் இக்காலத்தில் கடைப்பிடிப்பர்.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

காதலனுக்கு துாது

உன் மௌனமும்
உன் ஊடலும் - எனை
வாட்டுகின்றது. - உன்
பார்வை என் மேல் இல்லை
அதனால் என் உள்ளம்
கலங்குகின்றது
புயலும் இல்லாமல் - கடுங்
காற்றும் இல்லாமல் - என்
நெஞ்ஞம் சாய்ந்து விழுகின்றது.

என் கடற் கரை செவ்வாய் நாராய்
என் தலைவன் இல்லம் சென்று
அவன் கோபத்திற்கு என்ன
காரணம் என அறிந்து வா...
ஒரு பானை நெத்தலி பரிசாக தருகிறேன்

ஏய் மைனாவே நான் இங்கு
தனிமையில் புலம்புகிறேன் - நீ
உன் யோடியுடன் சுற்றுகிறாயோ
உன் யோடியுடன் என் மன்னவன்
இல்லம் சென்று எனக்காய் பரிந்து பேசு...

தெருவில் சோம்பேறியாய் உறங்கும் நாயே
உனக்கோர் வேலை தருகிறேன்
என் மணவாளனிடம் சென்று உனக்காய்
இங்கு இவள் புலம்புகிறாள் என்று கூறு
உனக்கு மாம்சமதை கொடுக்கிறேன்

என் வீட்டு கிளியம்மா உன் தலைவனிடம்
சென்று தலைவியவள் புலம்புகிறாள்
உங்களுக்காக பாவம் அவள் என்று கூறு
உனக்கு வழமயை விட அதிக
கௌவைப் பழம் தருகிறேன்.

நிலவே என் இரவின் கொடுமையை
பார்க்கும் தோழி நீ ஒருத்திதான்
என் அன்பனிடம் சென்று
துாக்கமில்லை வெகு நாள்
இவளுக்கென்று கூறு

நந்தவன பூங்காற்றே பூக்களோடு
காதல் கொண்டது போதும் என்
புலம்பல் கேட்டும் இரங்கவில்லையா
எனக்காய் அவன் இல்லம் வருடி
பேசுவீரா?????????????

யாராகிலும் எனக்காய் என்
மன்னவனிடம் பேசுவீர்களா
அப்படியானால்
நான் உங்களுக்கு அடிமை......