வியாழன், 31 மே, 2012

மரியாதை கொடுத்து வாங்க வேண்டிய விடயமா??மனிதாராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய ஒரு அம்சம் மரியாதை. அது சுயமரியாதையாயினும் சரி அல்லது பிற மரியாதையாயினும் சரி எல்லோர்கும் உலகின் இருப்புக்கும் சமூக அந்தஸ்துக்கும் முக்கியமானதாகும்.

சிறியவர்கள் என்றால் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது சாதாரணம். பெரியவர்கள் சிறியவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமா?? அப்படியொரு கேள்வியுள்ளது. இதன் விடையை நான் கூறுகிறேன். யார் யாருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது முக்கியமானது அல்ல அவரவர் நடத்தையின் பயனே மரியாதை. எம் நடத்தைகளே நமக்கு மற்றவர்கள் கொடுக்கும் மரியாதைக்கு சான்று. அது சிறியவராயினும் சரி பெரியவராயினும் சரி.

சர்வாதிக்கவாதி கிட்லருக்கும் அவன் வீரர்கள் மரியாதை செலுத்தினர் இது உண்மையாக அவன் நடத்தைக்கு கொடுக்கப்பட்ட மரியாதைதான். அது அவனின் சர்வாதிக்கம் எனும் நடத்தைக்கு பயந்து படை வீரர்களால் கொடுக்கப்பட்ட மரியாதை. இதை மரியாதை என்பதை விட பயத்தினால் உண்டான உணர்வு என்று கூறலாம்.

பெரியவர்கள் பொதுவாக சிறியவர்கள் தமக்கு மரியாதை செய்ய வேண்டும் என விரும்புவர். ஆனால் அப் பெரியவர் எப்படிப்பட்டவர் என்பதைதான் சமூகம் பார்க்கும். அவர் ஓர் குடி காரனாகவோ அல்லது உலகத்தால் வெறுக்கப்படும் தீய செயல்களை செய்பவராக இருந்தாலோ அவர் எப்படிப்பட்ட இடத்திலிருந்தாலும் சமூகம் அவர்ரை மதிக்காது.

இதே சிறியவர்கள் சமூக நல பணிகளிலும், பிறர்க்கு உதவும் சிறந்த விடயங்களிலும் கவனம் செலுத்தும் போது பெரியராயினும் சரி யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை செலுத்த முன்வருவர்.


மரியாதை கொடுத்து வாங்க வேண்டிய விடயம் கிடையாது. எம் நடத்தைக்கு உலகம் தரும் அன்பு பரிசு. இதை தக்க வைத்து கொள்வது அவசியம். உலகில் நல்லவர் என்று பெயர்வாங்க போராட வேண்டும் அதே உலகில் கெட்டவர் என பெயர் வாங்க ஒரு நொடி போதும்.

எது என்னவாக இருந்தாலும் எமக்கான சுயமரியாதையை இழப்போமெனில் இவிவுலகில் வாழ்ந்து பயனேது. நன்னடத்தை மிக்க மானிடராய் இவ்வுகிற்கு வாழ்வோம். உலகு நமக்கு என்ன செய்தது என்பதனை விடுத்து நாம் உலகிற்கு என்ன செய்ய போகிறோம் என்பதனை சிந்திப்போம் செயற்படுவோம் உலகில் மரியாதைக்குரிய மானிடராய் வாழ்வோம்.

அன்புடன் -

திங்கள், 28 மே, 2012

ஆமை வேட்டையில் குருநகர் மக்கள் NO-01உலகிலேயே இப்போது அருகி வரும் கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று கடலாமை இதன் இறைச்சிக்கு அவ்வளவு கிராக்கி. ஆசிய நாடுகளில் இதை பொதி செய்து ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வர். ஆசியாவில் உள்ள இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் ஆமை விடயத்தில் அவர்கள் கவனம் முக்கியமானதாக இருக்கும்.

ஏனென்றால் ஆமை புத்தருடன் சம்மந்தப்பட்ட விலங்கு. இதனால் சிங்களவர்கள் பொதுவாக பொத்தர்கள் ஆமை சாப்பிடுவது கிடையாது. அதுமட்டுமல்ல ஆமை வேட்டையில் ஈடுபடக் கூடாது என்ற சட்டமும் இலங்கையில் நடை முறையில் உண்டு.

இருப்பினும் கரையோர தமிழ் மக்கள் அதை யெல்லாம் கண்டுக்கிறதே கிடையாது. யாழ்ப்பாணம், மன்னார் உட்பட அனைத்து கடற்கரை சார்ந்த இடங்களில் ஆமை வேட்டைக்கு அளவு கணக்கே கிடையாது இது நானே நேரில் கண்ட சாட்சி. இதுவும் போக யாழ்ப்பாணத்தில் குருநகர், பாஷையூர், நாவாந்துறை போன்ற ஊர்கள் கடற் தொழிலுக்கு மிகவும் பிரபலமானவை. சராசரியாக ஒரு கிழமைக்கு இரண்டு தொடக்கம் ஜந்து ஆமைகள் வரை குருநகர் மக்களால் வேட்டையாடப்படுகின்றன.

ஆமைகளை கொண்டு வர (நேவி காரங்க) கடற்படை அமதிக்கமாட்டார்கள் அவ்வாறு பிடிபட்டால் அடி உதை கூட வாங்க நேரிடும் அல்லது நீதிமன்றத்திற்கு போக நேரிடும். ஆனாலும் வலைகளில் சுற்றி நேவி(கடற்கடை) இல்லாத சந்தர்ப்பத்தில் ஒரு வழியாக ஊருக்குள் கொண்டுவந்து ஒளித்துவிடுவார்கள். ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பெரும்பாலும் எல்லா குருநகர் வீடுகளிலும் ஆமை இறைச்சிதான். இதற்கு எனது வீடும் விதிவிலக்கல்ல. ஆனால் நான் சிறு வயது முதலே ஆமை இறைச்சி சாப்பிடுவது கிடையாது ஏனென்றால் அதன் வெடில் நாற்றம் எனக்கு பிடிக்காது.

இங்கு ஆமை இறைச்சி என்பது கிலோ கணக்கில் விற்கப்படுவது கிடையாது. பங்கு சார்ந்தே விற்கப்படுகிறது. ஒரு பங்கு கிட்டத்தட்ட எழுநுாறு முதற் கொண்டு ஆயிரம் ரூபாய் வரையும் இருக்கும் பெரும்பாலும் ஆயிரம் ரூபாயாகவே இருக்கும் ஆனாலும் அவ்வளவு விலை கொடுத்து தலா ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் அம்மக்கள் ஆமை இறைச்சியை வாங்கி உண்ணுவார்கள்.

இது மரபு ரீதியாக தொடரும் பழக்கமாம் நான் ஒருதியும்தான் ஆமை இறைச்சியை இந்த ஊருக்குள் சாப்பிடுவதில்லையாம் என்று என் அம்மம்மா எனக்கு திட்டாத நாளே கிடையாது எங்கோ இருந்து மாட்டு வண்டிகளில் வந்தெல்லாம் எத்தனை விலை கொடுத்தென்றாலும் வாங்குவார்களாம் ஆமை இறைச்சியை வாங்க கிழக்கிலிருந்து மக்கள் வருவார்களாம். அது மட்டுமல்லாது ஆமை இறைச்சிக்கு பல நோய்களை தீக்கும் மருத்துவ குணமும் உண்டாம் உதாரணமாக மூலவியாதி, குளிர் ஊதல் போன்ற வியாதிகளைகுணமாக்கும் வல்லமை உண்டு என்றெல்லாம் என் அம்மம்மா கூறுவார்.

ஆமை வேட்டை இங்கு இன்றைக்கு நேற்று அல்ல ஆண்டாண்டு காலம் தொடரும் ஓர் நிகழ்வாகவே காணப்படுகின்றது. இம்மக்கள் படிப்பறிவில் சற்று பின் தள்ளியவர்கள்.இதனால் இது நரியா தவறா என புரிந்து கொள்ளும் மன பக்குவம் அவர்களுக்கு கிடையாது. ஆமைகள் அழிந்து வரும் உயிரினம் என்று கூறி அதை நிறுத்துவது என்பது கடினமான செயல் ஆனாலும் பிரச்சாரங்கள் அது பற்றிய விளிப்புணர்வு கூட்டங்களி உரியவர்களால் முன்னெடுக்கப்பட்டால் இவ்வேட்டை ஓரளவு குறைய வாய்ப்புண்டு


ஞாயிறு, 27 மே, 2012

மரித்துப் பிளைத்தவள் 06சென்ற வாரம் ஜெயபுரத்தில் குறியேறிய விதம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்பதிவுக்கு ஏன் நான் மரித்துப் பிளைத்தவள் என்று பெயர் வைத்தேன் என்றால். ஒவ்வொரு நிமிடமும் தினம் தினமும் என் ஈழத்து வாழ்வில் மரித்து பிளைத்தவளாகதான் இருந்தே(ா)ன்(ம்).

ஜெயபுரம் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அவர்களின் ஆயுத பயிர்ச்சிக்கு கட்டாயமாக பங்கு பற்ற வேண்டிய சூழ்நிலை. இளஞர், யுவதியர் எல்லாரும் கட்டாயத்தின் பெயரில் ஆயுத பயிர்ச்சிக்காக அழைக்கப்பட்டு விருப்பமின்றியும், இல்லாமலும் விடுதலை புலிகள் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

பாடசாலைகள் எல்லாம் மூடப்பட்டு கல்வி கூடங்களான பாடசாலைகள் அகதிகள் முகாம்களாக மாறியிருந்தன. கல்விகள் ஒன்றும் கற்பிக்கப்படவில்லை. இதனிடையே, என் பெரியம்மாவின் மகன் என் அண்ணனுக்கு பயங்கர வருத்தும். ஆனால் விடுதலை புலிகள் இயக்கத்தில் சேரவும் ஆயுத பயிர்ச்சிக்கு வரவுமு் கட்டாயப்படுத்தினர். அது மட்டுமல்ல என் உறவினர் பலருக்கு காய்ச்சல் வாந்தி பேதி என வருத்தங்கள் ஏற்பட்டன. இதனால் அவர்களுடன் இணைந்து என் பெரியம்மாவும் அண்ணாவை கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு செல்லலாம் என தீர்மானித்தார். ஆனால் அங்கு போவது சாதரண காரியம் கிடையாது.

கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட படகு மூலம் கிராலி நீரேரி வழியா வெள்ளை கொடியுடன் யாழ்ப்பாணம் நோக்கி பயணப்பட்டார்கள். அப்போது கெலிகொப்டர் மூலம் இலங்கை ராணுவம் அவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது. வெள்ளை கொடி கண்டும் துப்பாக்கி சூடுகள் நிறுத்தப்படவில்லை. எல்ாரும் ஒரே குரலில் ஓஓஓஓ என்ற சத்தத்துடன் அழது புலம்பி வெள்ளை கொடியை துாக்கி காடட்டவே துப்பாக்கி சூடுகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அங்கிருந்த எனது அம்மாவின் சின்னம்மா (எனது அம்மம்மாவின் தங்கை), அவரது மகள் (எனது சித்தி), எனது மாமாவின் மூத்த மகன் என மூன்று பேர் சம்ப இடத்திலேயே உயிர் இழந்தனர். வருத்தமென வைத்திய சாலைக்கு செல்லும் மன்னரே நோயாளிளளை தாக்கிய கொடுமை.... அதுமட்டுமல்லாது அங்கிருந்த எல்லாருக்கும் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது.


படகே இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு அழகையுடனும் பயத்துடனும். யாழ்ப்பாணத்தை அடைந்தது..

செவ்வாய், 22 மே, 2012

கல்கி அக்காவும் நானும்


நர்த்தகி திரைப் படம் மூலமாக கதாநாயகியாக திரையுலகில் கால் பதித்தவர் நடிகை கல்கி. அது மட்டுமல்லாது அவர் ஓர் திருநங்கைகள் சமூக நல பணியாளர். ஒரு வழியாக அவரிடம் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பத்து கேள்விகளும் கேட்டு முடிக்க அப்பப்பா இரண்டு நாட்களாகி விட்டன தெரியுமா? முதலில் சுக நலன்களை விசாரித்து விட்டு அப்புறமா செவ்விக்கு சென்றோம்.

01- உங்கள் சகோதரி அமைப்பு ஏன் எதற்காக?

ஆதரவற்ற, உதவி இழந்த, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, பாடசாசைகளிலும், அலுவலகங்களிலும் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றுவதற்காக..

02- நர்த்தகி பட வாய்ப்பு பற்றி கூறுங்கள்.

என் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. என்னை ஓர் மிக சிறந்த நடிகையாக உலகிற்கு வெளிபடுத்த இயக்குனர் விஜயபத்மா மூலமாக கிடைக்கப்பெற்ற ஓர் வாய்ப்பு. இது கடவுள் தந்த வரம் என்றே கூறமுடியும்.

03- ஓர் நடிகையாக கல்கி எப்படி?

ஓர் சவாலான கதாபாத்திரம், நடிப்பு திறனை வெளி கொணர கூடிய பாத்திரம், கல்கி எவ்வளவு நேரம் திரையில் தோன்றுவேன் என்பது முக்கியமல்ல 05 நிமிடங்கள் என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடிய கதாபாத்திரமாக அமைந்தால் நல்லது. நான் கடவுள் படத்தில் பூஜாவின் பாத்திரம் போல் இருந்தால் எனக்கு பிடிக்கும்.

04- இப்போது நடிக்கும் திரைப் படங்கள் என்ன?

ஓர் மலையாள படத்தில் கதா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாளியுள்ளேன். கதையில் மாற்றம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு சற்று தாமதமாகியுள்ளது.பிரெஞ்சு மொழி பட வாய்ப்பு ஒன்று வந்தது.ஆனால் மறுத்துவிட்டேன் காரணம் இந்தியாவை விட்டு 01 வருடகாலம் பிரான்ஸில் தங்கியிருந்து படத்தை முடித்து கொடுக்க வேண்டிய சூழல்..

05- உலகம் திருநங்கைகளை திருநங்கை எனும் போர்வைக்குள் தள்ளிவிட்டது. ஆனால் திருநங்கைகள் யாரும் திருநங்கையாக இருக்க ஆசைப்படவில்லை ஒரு பெண்ணாக வாழவே ஆசைப்படுகிறார்கள்.  அவர்கள் பெண் உலகை சார்ந்தவர்கள். இது பற்றி உஙகள் கருத்து.

கலாசாரம், குடும்பம், என்று திருநங்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவ்வாறே இதனால் அவர்கள் திறமைகள் முயர்ச்சிகள் எல்லாம் கிழ் விழுந்து போகும் நிலை கண் கூடு. உலகம் திருநங்கைகளை திருநங்கை எனும் போர்வைக்குள் வைத்திருப்பது ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை காட்டுகிறது.

06- ஏதாவது தொலைக் காட்சி தொடர்கள் மூலமாக திருநங்கைகள் பிரச்சினைகளை சொல்ல முயர்ச்சிக்கலாமே?..

முயர்ச்சிக்கலாம் ஆனால் நிறுவனங்கள் தயாரிக்க முன்வருவது மிக கடினம்.

07- தமிழ் நாட்டு திருநங்கைகளிடத்து பொதுவாக படித்த திருநங்கைகளிடத்து பல விடயங்களிலில் ஒன்றுக் கொன்று முரண் பட்ட கருந்துக்கள் நிலவுகின்றன. இந்நிலை ஏன?

ஈகோ நான் பெரிசா நீ பெரிசா என்கிற பொறாமைதான்.

08- உங்களுக்கு இலங்கை திருநங்கைகளை பிடிக்குமா?

இலங்கை திருநங்கைகள் மட்டுமல்ல எல்லா தமிழ் திருநங்கைகளையும் பிடிக்கும் தமிழ் திருநங்கைகள் என்பதை விட திருநங்கைகள் எல்லாரையும் பிடிக்கும் பொதுவாக தமிழ் திருநங்கைகளை அதிகம் பிடிக்கும்...

09- உங்கள் வருங்கால கணவர் குறித்து கூறுங்களேன்,

என் கணவன் காதலன் எல்லாம் என் மடிகணினிதான் (லாப் டாப்). என்னோடு எந்நேரமும் இருந்து எனக்காக உழைக்கும் என் கணினிதான் என் கணவன் காதலன் எல்லாம். நான் பெரிய மனுஷியாக உருவானதற்கு என் லாப் டாப்பும் ஒரு காரணம் அதனால் என் கணவன் என் லாப் டாப்தான்.

அவருக்கு கொஞ்ஞம் உடம்பு சரியில்ல டாக்டர் வந்து கொண்டு போய்ட்டார். எப்பிடியும் இன்னைக்கு வந்திடுவார். (புரியலயா அதானப்பா லாப் டாப் பழுதாகிட்டுதாம் திருத்திறத்துக்கு கொண்டு போய்ட்டாங்களாம்.plz pray 4 him )

10- உங்களுக்கு எஸ்தர் சபியை பிடிக்குமா?

(ஒர் புன்சிரிப்புடன்) எஸ்தரை எனக்குப் பிடிக்கும் இலங்கையில் இருந்து கொண்டு திருநங்கைகள் விடயத்தில் கவனப்படுபவள். எஸ்தரை இது வரைக்கும் பார்த்தது கிடையாது ஆனாலும் எஸ்தரை பிடிக்கும். அவளின் முற்போக்குதனமான எழுத்தும் பிடிக்கும்.


அப்பப்பா ஒரு வழியா முடிச்சாச்சு. நன்றி கல்கி அக்கா என்னை பிடிக்கும் என்று கூறியதற்காக.

ஞாயிறு, 20 மே, 2012

மரித்துப் பிளைத்தவள் 05சென்ற வாரம் முகமாலையில் இடம் பெற்ற மிக கொடுமையான நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஒவ்வொரு ஈழத்தமிழர்களாலும் மறக்க முடியாத வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது இந்த போர்க்கால நினைவுகள்.

இறுகட்ட யுத்தத்தின் முன் முள்ளிவாய்க் கால் என்பது முல்லைத்தீவில் உள்ள சாதாரண ஓர் இடம். ஆனால் இன்று ஈழத்தமிழர் சரித்திரத்தில் இருந்து அழிக்க முடியாத ஓர் நினைவுச் சின்னம்.

இவ்வாறு அமைந்ததுதான் வன்னி எனும் பெரு நிலப்பரப்பும். வெய்யிலும் செம்மண புழுதியும், காடும், பற்றைகளும், கரடு முரடான பாதையுமாக காணப்பட்ட இந்த வன்னி ராச்சியம் ஆரம்ப காலங்களில் எந்த சிங்கள மன்னர்களும் கைப்பற்ற முடியாத அளவுக்கு பலம் வாயந்த ஓர் தமிழர் ராச்சியமாக காணப்பட்டதுஇ

சிங்கார வன்னியன் முதல் கொண்டு பண்டார வன்னியன் வரையான வீரமிக்க தமிழ் மன்னர்கள் கையில் இருந்தது. வன்னி வன்னியர் எனும் பரம்பரையினர் ஆண்டதாலே அப்பெரும் நிலப்பரப்புக்கு வன்னி மா ராச்சியம் எனும் பெயர் சூட்டப்பட்டது. இப்படிப்பட்ட தமிழர் பாரம்பரியம் மிக்க வன்னியே அன்று (1996) ஓட்டு மொத்த ஈழத்தவர்களையும் தாங்கி நின்றது.

முகமாலையில் இருந்து புறப்பட்டு காட்டுப்பாதையூடாக நடை பயணமாக ஜெயபுரம், பாலாவி போன்ற இடங்களை அடைந்தோம் இவை குடியேற்றமற்ற இடங்களாக அப்போது இருந்தன.சுற்றி எங்கனும் காடுகளும் ஈச்சம் பற்றைகளுமாக காணப்பட்டன. நாங்கள் சொந்த பந்தகளாக கிட்டத்தட்ட பதினைந்து குடும்பங்கள் ஜெய புர பகுதியில் குடியேறினோம். அப்பகுதியில் கிடைத்தவற்றை உண்டு இரண்டு நாட்களை கழித்தோம். இங்கு குடியேற்றம் இருப்பதை அறிந்த விடுதலை புலியினர் யுனிசெவ், ஜ.சி.ஆர்.சி போன்ற ஜ.நா நிறுவனங்கள் மூலம் எமக்கான நிவாரப் பொருட்களையும் உலர் ஊணவுப் பொருட்களையும் பெற்றுத்தந்து உதவினர்.

இங்கு குடியேற்றங்கள் இருப்பதை அறிந்த வேறு பல குடும்பங்களும் அங்கு வந்து குடியேற்றங்களை அமைத்து ஜெயபுரம் எனும் கிராமம் உருவானது...

என்றும் தொடரும் உன் நினைவுகள்...

உன் பிரிவை சந்தித்து
ஜந்தாண்டுகள் ஓடோடி விட்டன..
ஆனால் உன் நினைவுகள் மட்டும்
என்னை தொடர்ந்து கொண்டேதான்
இருக்கின்றன.

மதிக்கும் ஓர் நாள் நிம்மதி உண்டு
எனக்கு என்றும் அது இல்லை
செந்தணலில் இட்டு அழிக்க
நினைவுகள் காகிதங்கள் அல்ல
கல்லறையில் துயில் கொள்ளும்
நொடி வரையும் உன் நினைவுகள்
என்னோடுதான்

உன்னில் அதீத ப்ரியம்
என்பதலா என்னை அதீதமாய்
அழவைக்கிறாய்.
இறந்த என் நினைவுகளை - மீண்டும்
கருவாக்க ஆசைகொள்கிறேன்
உன் இதயமெனும் கருவறைக்குள்.

உன்னால் ஆன உன் நினைவுகள்
என் மரண வாசலிலும்
என்றும் என்னை விட்டு நீங்காதவை
தனிமையில் நானிருந்தும் தனிக்கவில்லை
ஏனெனில் உன் நினைவுகள் என்னோடு

வியாழன், 17 மே, 2012

முள்ளி வாய்க்கால் இனபடுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்....


கடல் அலையே ஒரு நிமிடம் நில்லு
வீர மரணம் கொண்ட தமிழ் மானிடர்
புகழ் சொல்லு...............................................

நெஞ்சை கணக்க வைத்த முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம். இன்று. சோகங்கள் நிழலாக தொடரும் எம் இனம் காவு கொள்ளப்பட்ட தினம் இன்று.

சிதறி ஓடிய நம் தமிழ் மக்களை, ஆயுதம் இல்லாது நிர்கதியாக நின்ற எம் உடன் பிறப்புக்களை, ஈவிரக்கமின்றி செந்தணலில் இட்டு சென்றாரே அந்த நெறி கெட்ட மானிடர். யுத்த பூமியாக இருந்த எம் ஈழம் இன்று பிண வாடை வீசும் மரண பூமியானதே. சுதந்திர தாகம் மேலோங்கி விக்கலும் எடுத்து இன்று மரணத்தையும் ஜனனித்து விட்டோம்.

ஓஓஓஓஓ என் கண்னே இன்று உன்னில் நீரில்லை அழுதழுதே எல்லாம் வற்றிப்போயிற்று. ஆஆஆஆ என் இதயமே என் சொல்வேன் அந்த இரத்த ஆற்றை. பிணங்களின் மேல் நடந்த அவலம் அதுவும் எம் இன மக்களில் உடல்களின் மேல் நாமே நடந்த அவலம் வேறெந்த எந்த இனத்திற்கும் வேண்டாமே... எம் பெண்களின் தாய்மையை எம் அனுமதியின்றி அனுபவித்தாரே தமிழ் போற்றும் எம் தமிழ் பெண்ணின் மார்புகளை அந்த வெறி கொண்ட சிங்கள நாய்கள் சிதைத்தனரே. ஓஓஓ அதற்கு எம் சிறுமியரும் இலக்கானாரே.

எத்தனை துன்பங்கள் கொண்டோம். எம் ஈழத்து வாழ்வில். இரத்த ஆற்றில் குளித்தோமே எம் இனத்தை மீட்டெடுக்க. புத்தகம் துாக்க வேண்டிய எம் இளஞர்கள் ஆயுதம் தாங்கினாரே ஏன்? எம் இனத்தை   காப்பாற்ற.

முள்ளிவாயக்கால் பிணநாற்றமே இன்னும் மறையாத மரண பூமியது. அங்கே இறந்த எம் உறவுகளுக்கு நாம் அஞ்ஞலி செலுத்தும் இந்த வேளை அங்கே இலங்கை அரசு வெற்றி விழா கொண்டாட்டமாக பட்டாசு கொளுத்தி துப்பாக்கி வெடித்து கொண்டாடுகிறார்கள்.

இருக்கட்டும் இறந்த எம் தமிழ் உடன் பிறப்புக்களுக்கு எம் அ்ஞ்ஞலியை செலுத்துவோம்.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.......

அன்பர்களே இதோ முள்ளிவாய்க்கால் நினைவுக் காணொளி உங்களுக்காக....................

செவ்வாய், 15 மே, 2012

இப்போது பிச்சை பாத்திரம் ஏந்துகிறேன்.

ஆஆ எங்கும் பச்சை புல் வெளிகள்
மதுரம் சிந்தும் நந்த வனங்கள்
சல சலவென ஓடும் நீரோடைகள்
இயற்கை அன்னை முழுப் பாசத்தையும்
எங்கள் ஊரின் மேல் கா்டுகிறாள்

இப்படி அமைந்த ஊரின் யமிந்தார்
மகளாக வரம் பெற்று பிறந்தேன்.
முன்னான்காம் வயதில் குத்த வைச்சேன்
சீரும் சிறப்பும் பெற்று
யாதொன்றிற்கும் குறைவில்லாமல்
வாழ்ந்தேன்.

எத்தனை காதல் வினாக்கள்
என் காதில் கேட்டன.- அத்தனைக்கும்
இல்லையென்று கூறி
பெற்றாரின் தன் மானம் காத்தேன்
சிந்தை தெளிந்த பெற்றாராரோ - எனக்கும்
பக்கத்துாரில் மணம் செய்து வைத்தனர்

அழகாய் தொடங்கியது எம் தாம்பத்தியம்
அதன் பரிசாக யாருக்கும் யார் போட்டி
என்று இல்லாமல்
இவ்விரெண்டு புதல்வர் புதல்வியர்
கிடைத்தனர்.
அழகுடனும் அறிவுடனும் ஊர் மெச்சும்
வகையில் வளர்த்தேன்.

கண்டங்கள் பல கடந்து படிக்கவும் அனுப்பினே.
மீண்டும் வரும் வேளை அழகான மங்கையரை
திருமணமும் முடித்து வைத்தேன
எங்களுக்கோ வயதாகிறது - என்
கணவர் படுத்த படுக்கை ஆனார்
அதே ஆண்டில் மரணமும் எய்தினார்.

அன்று முதல் வீட்டில் ஓர் மூலையில்
யடமென ஆனேன்.
நாய்க்கு தருவது பித்தளை தட்டில் சாப்பாடு
வாய் வெடித்த கோப்பையில் தண்ணீர்
பொக்கிஷங்கள் யாவும் தங்கள் நாமமாகட்டும்
என்று அவர்கள் கேட்கவே
எல்லோரும் பகிர்ந்தளித்தேன்

மறுநாளே தடி கொண்டு விரட்டினர்
எல்லாரும் சேர்ந்து
நான் பாலுாட்டி சீராட்டி வளர்த்ததன்
பயன் பாரீரோ
நெறி கெட்ட இந்த மானிடரின்
தீசெயல் கேளீரோ
யமிந்தார் மகளான நான் இப்போது
பிச்சை பாத்திரம் ஏந்துகிறேன்....

ஞாயிறு, 13 மே, 2012

மரித்துப் பிளைத்தவள் 04

சென்ற பதிவில் 03 மாத காலம் பேணி மீன்கள் உண்டு எம் பசியாற்றிய  விடயங்களை பகிர்ந்து கொண்டேன். இடப் பெயர்வின் போது கேரைதீவு சங்குப்பிட்டி பாலம் யாழ்ப்பாண மக்களால் மறக்க முடியாது. ஏனென்றால் ஏ9 பாதை மூடிய பிறகு கிளாலி கடல் நீரேரி வழியாக வன்னியை அடைய உதவியது இதுவே. இதையும் 1996ல் உடைத்து நாசமாக்கினர்.

1996 யாழ்ப்பாணம் முழுமையாக விடுதலைப் புலிகள் பட்டுப்பாட்டிலிருந்து இலங்கை ராணுவம் கைவசம் வந்தது. அதே ஆண்டிலேயே விடுதலைப் புலிகள் முழுதாக வன்னியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் செல் தாக்குதல்களும், குண்டு வீச்சுகளும் நின்ற பாடில்லை.

பாகாப்பு இடமாக அறிவிக்கப்பட்டிருந்த முகமாலையிலும் குண்டுகள் சரமாரியாக பொழிந்தன. அதற்கு பயந்து முகமாலையிலிருந்த சில குடும்பங்கள் வன்னியின் உட்பகுதிக்குள் அதாவது நாச்சிக்குடா, ஜெய புரம், பாலாவி, முழங்காவில் போன்ற காட்டுப் பகுதிகளுக்குள் இடம் பெயர்ந்து சென்றனர். நாங்களும் அங்கு செல்ல எத்தணிக்கையில் தணங்கிளப்பில் இருந்த எம் உறவினர்கள் என்னும் வந்து சேரவில்லை அதனால் அவர்களை எதிர்பார்த்து பொருட்களையெல்லாம் பொதி செய்து விட்டு அந்த ஆலமர காட்டுக்குள் காத்திருந்தோம். திடீர் என்று நாங்கள் தங்கியிருந்த இடத்தில குண்டுகள் வெடித்தன அவை சுப்பர் சோனி எனும் போர் விமானத்தின் மூலம் வீசப்பட்ட குண்டுகள் உடனே எல்லாம் திக்கு திசை தெரியாது ஓடினோம். நான் எப்பவும் என் அக்கா கையில். பாதுகாப்பு கிடங்குகள் பெரிதாக அங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை அப்போது விசாலமாக வளர்ந்திருந்த ஆலமர பொந்துகளுக்குள் மக்கள் நெருக்குப்பட்டு புகுந்தனர்.


அப்போது என் அக்காவும் என்னை துாக்கி கொண்டு அழுது கொண்டே ஒரு பொந்தினுள் புகுந்தாள். எங்களுக்கு முன்பாக இருந்த பொந்தை இலக்கு வைத்து தாக்கினது போல் குண்டுகள் விழுந்து ஆலமரமே பற்றி எரிந்து சாய்ந்தது. என் அக்கா இப்போது பிரான்ஸில் உள்ளால் அவளிடம் தொலை பேசியில் நேற்று இந்த அனுபவத்தை கேட்கும் போதே விம்மி விம்மி அழ தொடங்கி விட்டாள். அவ்வளவு மோசமானதாக அவள் கண்முன் நடந்தது. நானும் அவள் பாவம் பச்சை உடம்புகாரி இப்போதுதான் அவளுக்கு ஒரு பெண் குழந்தை கிடைத்திருந்தது. அதனால் அவளை மனங்குழப்பாமல் விட்டுவிட்டேன் அந்தளவுக்கு மனதில் ரணமாய் அமைந்திருந்தது அந்த சம்பவம்.

குண்டுகள் அடிப்பது குறைந்த பிறகு அந்த இடமே அழுகை அங்கலாய்ப்பும் நிறைந்த இடமாக இருந்தது. எங்கு திரும்பினாலும் அழுகையின் கூக்குரல்கள்தான் கேட்டன பற்றி எரிந்து கொண்டிருந்த ஆலமரத்தில் மனித ஊனங்கள் சற்று முன் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தவர்களின் ஊனம்தான் அது.இதை கண்டு மயங்கிவிழுந்தவர்கள் என் அம்மா, பெரியம்மா சித்தியும் அடங்குவர் உருவேளை நானும் என் அக்காவாக இருக்க கூடுமோ என்று . இதை என் அம்மா கூறும் போதே பலம்பி அழுது விட்டார் மேலும் அவரை கேட்க எனக்கு மனம்வரவில்லை சேர்ந்தே நானும் அழுது விட்டேன்.பின் எல்லாரும் வெளி ஓடிவந்து தன் தன் குடும்பங்களை தேடினர் ஒருவழயாக எங்கள் குடும்பத்தை அடைந்தோம். அப்போது என் பெரியம்மா அக்காவுக்கு நல்ல அடியா்ம். ஒரு இடத்தில இருக்க சொன்னா இருக்காம என்னையும் துாக்கி கொண்டு திரிந்ததற்காகவாம். என்று என் அம்மா சொன்னார்.

03 நாட்கள் மரண பயத்துடன் காத்திருந்த பிறகு. ஒரு வழியாக எம் உறவினர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தனர்............ தொடரும்........

சனி, 12 மே, 2012

உயிர் கொண்ட நாள் வரை உனை மறவேன் தாயே...

தேனினும் தேனடையிலும்
மிகவும் மதுரமானது
தாய் பாசம் - அதற்கு நிகர்
வேறென்ன நான் கூற

எமை உலகிற்கு ஈய
இரண்டாம் முறை
ஜென்மம் எடுத்தாய்
பிரசவத்தின் போது

தெய்வத்தை இது வரை
கண்டதில்லை - நான்
நீயே எம் கண் கண்ட
தெய்வம் தாயே

நீயிருக்கும் ஒவ்வொரு
இல்லமும் கோவிலம்மா
நீயில்லா இல்லமோர்
பாலை நிலமம்மா

இரத்தத்தை பாலாக்கி
எமக்கு தந்தாய் - உனைப் போல
வள்ளல் இவ் உலகில்
இல்லை தாயம்மா

உன் ஊண் சதை உருக்கி
எமக்கு உணவளித்தாய்
நான் பசியாறிட - நீ
பட்டினி கிடந்தாய்

உலகின் முடிவு - என்
கண் முன் வந்தாலும்
என் உயிர் கொண்ட நாள் வரை
உனை மறவேன் தாயே..

என் அனைத்து தோழமைகளுக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்தை கூறி நிற்கிறேன். அத்தோடு உங்கள் அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்.

நடிகர் சந்தானத்திற்கு திருநங்கைகள் சமூகம் கண்டணம்.

லீலை
 தற்போது வளர்ந்துள்ள நகைச்சுவை நடிகர்களுக்குள் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவிற்கு இன்றியமையாதவர். புகழின் உச்சியில் இருப்தாலோ என்னவோ அவர் பேச்சுக்கு அளவு கணக்கே கிடையாது. காமெடி என்ற பெயரில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது மிக வருந்ததக்கது.

ஏன் இதை கூறுகிறேன் என்றால் சமூக அங்கீகாரம் ஓர் நிலையில் இருந்தாலும் திரைப்பட துறையில் திருநங்கைகள் இப்போது முன்னேற்றம் கண்டுள்ளனர். அன்று கோடான கோழி கூவுற வேளையிலிருந்து இன்று ஊரோர புளியமரம் வரை எல்லா திரைப்படங்களும் திருநங்கைகளை கேவலம் செய்யும் விதமாகவே அமைந்தது. இதை முற்றிலும் மாற்றிப் போட்டது ஜீவாவின் தெனாவெட்டு தொடர்ந்து முழு நீளமாக இன்று நோர்வே விருதை வெற்ற நர்த்தகி திரைப்படம் திருநங்கைகளின் உணர்வை உரித்து வைத்தது. தொடர்ந்து விருதகிரி, காஞ்சனா மற்றும் என்னும் வெளிவர இருக்கும் பால் போன்ற திரைப்படங்களின் கதாநாயகிகளாகவே மாறிவிட்ட திருநங்கைகள் சமூகத்தை கேவலம் செய்வது அது புகழ் பெற்ற திருநங்கைகளையே அவமதிப்பது விரும்பத்தகாதது....

நடிகர் சந்தானம் முன்னதாக நடித்த கந்த கோட்டை திரைப் படத்திலும். ஒரு நகைச்சுவை காட்சியில் திருநங்கைகளை கிணடல் செய்திருப்பார் அது என்னவெனில் உங்களுக்கு ராசியான இலக்கம் எது? அந்த இலக்கப்படி வருகிற பெண்ணுமாதிரிதான் நீ கட்டிக்கப் போற பொண்ணுமிருப்பா என்று சந்தானம் சொல்ல ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கங்களையும் சொல்லி வர்ற பொண்ணுகள பாத்து சந்தானம் கிண்டல் பண்ணிக் கொண்டிருப்பார் அதில ஒருத்தன் எனக்கு ராசியான நம்பர் ஒன்பது என்று சொல்ல சந்தானம் அதுக்கு நீ கூவாகத்துக்குதான் போக வேணும் என்று சொல்லி மிக சாதாரணமாக கிண்டல் செய்திருப்பார்.

அடுத்ததாக தற்போது வெளியாகியிருக்கும் லீலை திரைப்படத்தில் ஒரு பொண்ணப்பாத்து இவளதான் நான் கட்டிக்கப் போறன் என்று தன நண்பனிடம் கூறிவிட்டு அந்த பெண்ணிடம் சென்று என்னை கட்டிக்க சம்மதமா என்று கேட்க அந்த பெண்ணும் சம்மதம் ஆனால் திருமணத்தை ஒரு டி.வி நிகழ்ச்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று அந்த பெண் கூறு எந்த டி.வி என்று சந்தானம் கேட்க விஜய் டி.வி என்று அந்த பெண் சுறுவார் அதற்கு சந்தானம் என்ன நிகழ்ச்சி என்று கேட்க அந்த பெண் சற்று குரலை உயர்த்தி இப்படிக்கு ரோஸ் என்று கூறுவார். அதற்கு சந்தானம் குரல் ஒரு மாதிரி இருககவே நினைச்சன் இது அதுதான் என்று என்பார் தொடர்ந்து அந்த திருநங்கையை பார்த்து அண்ணா, அக்கா என்று கூப்பிடுவார். தொடர்ந்து கூவாகம் பற்றியும் சில விஷம சொற்பிரயோகங்களையும் பயன் படுத்தியிருப்பார்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் அன்றுவிற்கு ஒரு வேண்டு கோள் உங்களுக்கும் திருநங்கை யாருக்கும் தனிப்பட்ட விவாதங்கள் இருந்தால் அதை மீடியா வரை கொண்டு வருவதற்கு காரணம் என்ன? இதெல்லாம் போக திருநங்கை ரோஸ் மேல் உங்களுக்கு என்ன கோபதாபமோ? திரு சந்தானம் அவர்களே இது உங்களுக்கும்தான். அவரை தனிப்பட்ட விதத்தில் குத்தி காட்டியது தனி மனித உரிமை மீறல். இதை நியாயம் கூற உங்களால் முடியாது.

இதற்காக இப்படி குழுவினருக்கும், தணிக்க வேண்டியவைகளை தணிக்காமல் , கண்ட கண்ட காட்சிகளையும் உலாவ விடும் தணிக்கை குழுவிற்கும் திருநங்கைகயர் கண்டனம் தெரிவித்து கொள்கின்றனர்.

வெள்ளி, 11 மே, 2012

இன்று முதல் இதயம் பேசும்....

என் அன்பு மிக்க உறவுகளே. இவ்வளவு காலமாக பேரொளி எனும் தலைப்பில் இயங்கி வந்த என் வலைப் பதிவு. இன்று முதல் என் இதயம் பேசுகிறது எனும் தலைப்பில் இயங்கும்

என் வலைப் பதிவில் இடம் பெறும் கட்டுரைகளானாலும் சரி, கவிதைகள் ஆனாலும் சரி என் சொந்த அனுபவங்களின் விளைவாக உருவானவை. என் இதயத்தின் குமுறல்களை எழுத்து வடியில் கொடுப்தே இந்த வலைப் பூ. அதனால் பேரொளி எனும் பெயர் இதற்கு பொருத்தமாகாது என்பதனால் நான் இப்பெயரை தேர்ந்தெடுத்தேன்.

என் இதயம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் இதில் பதிவாகும். சந்தோஷமானாலும் , துக்கமானாலும் என் இதயம் பேசும் மொழி இந்த எழுத்து மொழி. என் வலைப் பூ உருவாக்கத்தில் எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.குறிப்பாக மது மதி அண்ணா (துாரிகையின் துாறல்) மற்றும் தலைப்பு பட உருவாக்கத்தில் உதவும் என் தோழன் ரிறோன் மெல் அவர்களுக்கும் அத்தோடு என் வலைப் பூ தோழமைகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

ஞாயிறு, 6 மே, 2012

மரித்துப் பிளைத்தவள் 03

சென்ற பதிவில் யாழ்ப்பாணத்திலிருந்து முகமாலைக்கு நடை பயணமாக இடம்பெயர்ந்து சென்ற அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இவை என் 03 வயது (1995) அனுபவங்கள் என்ற படியால் என் அம்மாவின் உதவி கொண்டே சில விடயங்களை எழுதுகிறேன். இதற்காக என் அம்மாவிற்கு எனது நன்றிகள்.

கூடாரங்கள் நிரம்பிய பேணீ மீன்கள்.......ஒரு வேளையாக நடையாக நடந்து போகும் வழிகளிலே கிடைத்தவற்றை சமைத்துண்டு பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருந்த முகமாலையை வந்தடைந்தோம். வரும் வழியிலே எத்தனை உயிர்கள் எம் கண் முன்னே காவு கொள்ளப்பட்டன. பல இடத்திலிருந்தும் பல்வேறு மக்கள் கூட்டம் முகமாலையில் தஞ்ஞம் அடைந்தன்.

அங்கிருந்த (இப்போது புத்தரின் கோவிலாக மாற்றப்பட்டுள்ள) புனித. பிலோமினா ஆலய வளவிற்குள். பல குடும்பங்கள் கூடாரங்கள் அமைத்தது குடியேறின. பல ஆலமரங்கள் செறிந்து வளர்ந்திருந்ததால். வெய்யிலில் இருந்து பாதுகாப்பு கிடைத்தது ஆனால் செல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கவில்லை

அப்போது முகமாலை விடுதலைப் புலிகள் கையில் இருந்தது. அங்கே விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறிதளவே இருந்த படியால் படையெடுத்து வரும் இலங்கை ராணுவத்தை எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில் அவர்கள் கைபற்றிய ஆயுதங்களை தவிர. உணவுப் பொருட்களை மக்களின் பாவனைக்காக விட்டு விட்டு வன்னியின் உட்பிரதேசத்திற்கு சென்றனர். அவர்கள் விட்டுச் சென்ற உணவு பொருட்களில் பிஸ்கட்கள், சோயா மீல்ஸ், பேணீ மீன்கள் (ரின் fவிஸ்) போன்றன அடங்கும்.

மக்கள் உணவில்லாது தவித்ததற்கு போதுமான அளவு உணவு கிடைத்தது. என் அப்பா, அக்காமார், எல்லாரும் உணவுப் பொருட்களை சேகரித்து கூடாரங்களில் அடுக்கினர். அதில் அதிகம் சேர்ந்தது பேணீ மின்கள். கிட்டதட்ட அவை எங்களுக்கு மூன்று மாதமளவு போதுமானதாக இருந்தது.

என் அம்மா வழி உறவினர்கள் மாத்திரமே முகமாலையில் எங்களோடு இருந்தனர். ஆனால் என் அப்பா வழி உறவினர்கள் தனங்கிழப்பு மற்றும் நாச்சிக்குடா பகுதிகளில் குடியேறியிருந்தனர். இவை அவ்வளவாக பாதுகாப்பற்ற இடமாக இல்லை. இரு படையினருக்கும் சண்டை முட்டி கொண்ட நேரத்தில் இடையில் சிக்குண்ட இடங்கள் இவையே. இதில் பல உயிர்கள் மாண்டன. எனது அப்பம்மா(அப்பாவின் அம்மா), மாமி (அப்பாவின் தங்கை) , மாமியின் 06 மாத குழந்தை என ஒரு நாளில் என் உறவுகளின் உயிர் காவப்பட்டன. இவை மட்டுமல்ல என்னும் பல எனக்கு அறிமுகமாகாத உயிர்கள் கொல்லப்பட்டன.

இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய தன்னும் வழியில்லாமல் இருந்த இடத்திலேயே புதைத்து விட்டு எஞ்சி உள்ளவர்கள். தப்பி வன்னியின் உள்ளுக்குள் சென்று காடுகளில் குடியிருப்புகளை அமைத்தனர்.
(படங்கள் - நன்றி கூகிள்)

.......தொடரும்........

வியாழன், 3 மே, 2012

சொர்ணக்குயில் சொர்ணலதாவின் வாழ்க்கைப் பாதை (பாகம்-02)

சொர்ணலதா கட்டற்ற இசைக் கழஞ்சியம் பெற்றெடுத்த முத்து. இவரின் ரசிகையாக இருப்பதற்காக நான் பெருமைப் படுகிறேன். இவரை இவர் இறக்கும் 05 மாதங்களுக்கு முன்தான் தெரியும். அதாவது இப்படிப்பட்ட பாடகி ஒருவர் இருக்கிறார் என்று.. இவரின் குரல் ஏற்கனவே எனக்கு பழக்கப் பட்டிருந்தாலும் யார் இவர் என்று யோசித்திருக்கிறேனே தவிர இவரை பற்றி அறிய முன்வரவில்லை இவரின் பெயர் கூட எனக்கு தெரியாது. தேவாலயங்களில் பக்திப்பாடல்கள் பழகும் நேரம் இமையாக எனும் கிறிஸ்தவ ஆல்பத்திலிருந்த மண்ணில் கலந்திடும் மழைத் துளி போல எனும் பாடலை பழகும் நேரம் நாங்கள் ஸ்ருதி மாறி பாடிவிட்டோம். அப்போது பாடலை பழக்கிய அருட்தந்தை ஒருவர் நீங்கள் இந்த பாடலை பாடிய பாடகிக்கே அவமரியாதை செய்து விட்டீர்கள். அவர் எவ்வளவு பெரியவர் தெரியுமா? என்றார். நாங்கள் யார் அவர் என்று கேட்க சொர்ணலதா பற்றி சிறிய விடயங்கள் கூறினார். அப்போதிலிருந்து நான் அவர் ரசிகை. எவ்வளவு பெரிய புகழ் சம்பாரித்த ஆளாக இருந்தும் ஒரு சினி பிரியைக்கு இவரை பற்றி தெரியவில்லை. எவ்வளவு அமைதியானவர் என்று என் உள்ளம் கேட்க ஆரம்பித்து, அவரை பற்றி தேடி படித்து அறிந்து கொண்டேன்.அவர் பாடிய கிறிஸ்தவ பாடல்களாயினும் சரி, சினிமா பாடலகளாயினும் சரி தேடி கேட்க ஆரம்பித்தேன். மெய்மறந்து நின்றேன்.

ஏற்கனவே நான் பதிந்த பதிப்பில் இவரின் ஆரம்ப காலத்தையும், இவரின் விருதுகளையும் பற்றி கூறியிருந்தேன். அது இவரின் சினிமா வாழ்க்கை பற்றிய முன்னோட்டமாக நான் தந்திருந்தேன்.இப்போது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து எனக்கு தெரிந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

சொர்ணலதா என்றாலே சினிமா வட்டாரத்துக்குள் அமைதி எனும் பெயர் உண்டு. இவரின் சுபாவமே இப்படித்தான். அவ்வளவாக யாரிடமும் பேசிக் கொள்ள மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்.திருமணம் செய்து கொள்ளாமல் இசைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.கேட்கும் கேள்விக்கு மாத்திரம் பதில், தெரிந்தவர்களை கண்டால் ஒரு புன்சிரிப்பு அவ்வளவுதான். பதிப்பறை (றெக்கோடிங் றுாம்) வந்தாலும் எப்போதும் தான் பாட வேண்டிய பாடல்களை பழகி கொண்டே இருப்பாராம்.

எப்போதும் இவர் முகத்தில் தெரியும் சோகம்  மற்றவர்களை சிந்திக்க வைக்கும். இவருக்கு அப்படி என்ன சோகம்? ஏன் இவர் கவலையாக உள்ளார்? என்ன காரணம் என்றெல்லாம் சிந்திக்க வைத்துள்ளது. இவ்வளவு புகழ் உள்ள இவருக்கு நண்பர்கள் வட்டாரம் மிக மிக அரிது.ஏன் இவர் யாரிடமு்ம் பேசுவது இல்லை, பழகுவது இல்லை என்பது இன்று வரை புரியாத புதிர் இவரின் வாழ்வை ஆராய்ச்சி செய்ய என்னால் முடியுமானால் ஆய்வாளர்களை அழைத்து வருகிறேன்.

இவர் நம்மோடு இன்று இல்லாவிடினும் இவரின் குரல் மூலம் என்றும் நம்மோடு வாழ்வார். சொர்ணலதாவுக்கு விஜய் டி.வி செலுத்திய கண்ணீர் அஞசலி மரியாதை நிகழ்வை இதோ உங்களுக்காக தருகிறேன்.

விருது விருது எனக்கு விருது.சகோதரி கலை அவர்கள் பாசத்தோடு இந்த விருதை எனக்கு பரிந்துரைத்திருக்கிறார். அதற்து எனது அன்பு கலந்த நன்றிகள் சகோதரி கருவாச்சி கலைக்கு. நாம் எவ்வாறிருந்தாலும் எம் உணர்வுகளை வெளி கொணரும் இந்த எழுத்துக்கள் மூலம் கிடைத்த சொந்தங்களில் ஒருவர்தான் சகோதரி கலை அவர்கள். அவர்கள் இவ்விருதை தந்ததில் மகிழ்ச்சி

என்னை பற்றி ஏற்கனவே நான் பெற்ற விருதுக்காக கூறியிருக்கிறேன் அதை இங்கே பார்க்கலாம்.

இதை நான் பின்வரும் 03 சகோதரர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
  1. வசந்த மண்டபம் - மகேந்திரன்
  2. மயிலிறகு - மயிலன்
  3. தென்றல் - சசிகலா
தயவு செய்து மனமுவந்து இவ்விருதை பெற்றுக் கொள்ளுமாறு சகோதரர்களிடம் கேட்டு கொள்கிறேன்.
     

செவ்வாய், 1 மே, 2012

என் இழிச்சொல் நீக்க வா

கண்கள் இங்கே இமைக்க
மறுக்கின்றன. - உனை காணாமல்
மல்லிகை மணம் வீசி
என் கூந்தல் நெடு நாள் ஆகிறது
மாரி சொரியும் மார்கழியில்
சென்ற நீர் என்னும் திரும்பவில்லை ஏனோ
கூதலும் போய் கோடையும் போய்
கருவடி வேம்பு பூக்கும் வசந்தமும்
பிறந்தும் எனை அடையவில்லையே

என் மணவாளனே உமக்கு ஏதும்....
இல்லை கண்ணகி போல
கதற வைக்காதே என் மனை வந்திடு
அன்னத்தை பிசைந்து
இந்த கைகள் வெகு நாட்கள் ஆகிவிட்டன.
மன்னவன் உமக்கேதும் நிகழ்ந்திருக்க
கூடுமோ என்பதையும் மறுக்கிறது என்
மனம்.....

உமக்காய் வாசலில் நான்
எதிர்பார்த்திருக்க ஊர் என்னை
வசை மொழிபாடுகிறது.
அவர்கள் சுடு மொழிகள் என்னை
கவனில் எறிபட்ட கூழங்கற்களாய்
தாக்குகின்றன.
உள்ளம் மரத்து உம்மில்
ஊடல் வருகிறது.
வசை மொழிபாடும் மாந்தரின்
இழிச் சொல் நீக்க விரைந்து வா
என் தலைவா
எப்போது எனை வந்து சேர்வாய்.